திமிருக்கு தடுப்பு மருந்து கிடையாது

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ஜூலை மாதத்துக்கான தடுப்புமருந்து இன்னும் இந்தியா வந்து சேரவில்லை’ என்று பதிவு ஒன்றை இட்டிருந்தார். இதற்கு பதிலளித்த ஹர்ஷவர்தன், ‘ஜூலை மாதத்திற்கான தடுப்பூசி தகவல்கள் குறித்து நான் ஏற்கனவே தரவுகளை வெளியிட்டு இருந்தேன். ராகுலுக்கு என்னதான் பிரச்னை? அவர் அவற்றை பார்க்கவில்லையா? திமிருக்கும் அறியாமைக்கும் தடுப்பு மருந்து கிடையாது’ என்று தனது டுவிட்டரில் பதில் அளித்தார். மத்திய அமைச்சர் பியூஷ் கோயலும் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘ஜூலை மாதம் 12 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் இருக்கும். தனியார் மருத்துவமனைகளுக்கு தனியாக விநியோகம் செய்யப்படும். தடுப்பூசி குறித்து 15 நாட்களுக்கு முன்னரே மாநில அரசுகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கோவிட்டிற்கு எதிரான போராட்டத்தில், வெற்று அரசியல் சரியானது அல்ல என்பதை ராகுல் புரிந்து கொள்ள வேண்டும்’ என்று பதிவிட்டார்.