தருமபுரம் ஆதீன திருமடத்தில், 27வது குருமகாசன்னிதானம் மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்ற பிறகு செய்தியாளர்களிடம் மிழக ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பேசினார். அப்போது அவர், ‘சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை தரிசனத்திற்கு, நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. அதுபோல தருமபுரம் ஆதீனம் நிர்வகிக்கும் கோயில்களில் எந்த புகாரும், சர்ச்சையும் ஏற்படவில்லை. சிதம்பரம் நடராஜர் கோயிலை பொறுத்தவரை, தீட்சதர்களுக்குள் உள்ள பிரச்னை, தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் பிரச்னை என, பல புகார்கள் வந்துள்ளன. புகார்கள் குறித்து ஆய்வு செய்யவே அறநிலையத்துறை சார்பில் கடிதம் அனுப்பியுள்ளோம். திருக்கோயிலை அறநிலையத் துறை ஏற்றுக் கொள்ளும் என நாங்கள் கூறவில்லை. பொது கோயில்களில் புகார்கள் வந்தால், அதை விசாரிக்க அறநிலையத் துறைக்கு உரிமை உண்டு. இது தீட்சிதர்களுக்கு, தில்லை நடராஜர் கோயில் நிர்வாகத்திற்கு எதிரான நடவடிக்கை இல்லை. சிறந்த முறையில் நடைபெறும் நிர்வாகம், கோயில்களை அறநிலையத் துறை கையில் எடுக்க முயற்சிக்கக் கூடாது என, முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். சட்டத்திற்கு புறம்பான செயல்கள் இருந்தால் தான் அந்த கோயில்கள் குறித்து விசாரணை நடத்துவோம். இறையன்பர்கள் மகிழ்ச்சி தான், அறநிலையத் துறையின் மகிழ்ச்சி’ என்று கூறினார்.