தலைமை செயலகத்தில் கோப்புகள் திருட்டு

மதுபான வரிகள் ஊழல், அரசு குடியிருப்பை புதுப்பிப்பதில் பல கோடிகள் ஊழல் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டிருப்பதாக டெல்லி ஆம் ஆத்மி கட்சி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது பல ஊழல் புகார்கள் முன்வைக்கப்படுகின்றன.இந்த சூழலில், டெல்லியின் தலைமை செயலகத்தில் ஊழல் தடுப்பு அதிகாரியான ஒய்.வி.வி.ஜே.ராஜசேகரின் அலுவலகத்தில் இருந்து பல முக்கிய கோப்புகள் திருடப்பட்டுள்ளன.முன்னதாக, அவர் மீது புகார் வந்ததாகக்கூறி ஆம் ஆத்மி அரசு கடந்த மே 15ல் ராஜசேகரை அந்த பொறுப்புகளில் இருந்து விலக்கியது.அதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் தான் டெல்லியின் துணைநிலை ஆளுநர் அவருக்கு பொறுப்புகளை அளித்திருந்தார்.இந்நிலையில், ராஜசேகர் பொறுப்பிலிருந்து விலக்கப்பட்ட சமயத்தில் அவரது அறையிலிருந்து கோப்புகள் திருடப்பட்டுள்ளன என டெல்லி பா.ஜ.க ஆதாரத்துடன் புகார் கூறியுள்ளது.கடந்த மே 16ம் தேதியன்று பதிவான ஒரு சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டுள்ளது.அதில், நள்ளிரவு 2 மணிக்கு அதிகாரி ராஜசேகரின் அறையினுள் 3 பேர் நுழைந்து அங்கிருந்து சில முக்கிய கோப்புகளை எடுத்துக்கொண்டு வெளியேறுவது பதிவாகியுள்ளது.இது குறித்து டெல்லி சட்டப்பேரவையின் எதிர்கட்சித் தலைவரான ராம் சிங் பிதூரி, “மாலை 6 மணிக்கு பிறகு தலைமை செயலகத்தில் நுழையத் தடை இருக்கும்போது அந்த 3 பேர் உள்ளே சென்றது எப்படி? இவர்கள் அனைத்து ஊழல் கோப்புகளையும் திருடியுள்ளனர்.இதற்கு தார்மிகப் பொறுப்பேற்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.இந்த திருட்டு சம்பவம் குறித்து டெல்லி காவல்துறையிடம் புகார் அளிக்கவுள்ளோம்” எனத் தெரிவித்தார்.