உஸ்பெகிஸ்தானின் சாமர்கண்ட் நகரில் சமீபத்தில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொண்ட பாரதப் பிரதமர் மோடி, அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து பேசினார். அப்போது இருவரும், உணவு, எரிசக்தி, பாதுகாப்பு, உரம் தொடர்பாக விவாதித்தனர். இந்த சந்திப்பினிடையே மோடி, ‘தற்போது போருக்கான காலம் அல்ல’ என வலியுறுத்தினார். இது தொடர்பாக ஐ.நா சபையின் பொதுக்கூட்டத்தில் பிரதமரை பாராட்டி பேசிய பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், தற்போது போருக்கான காலம் இதுவல்ல என பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியது சரியானது. கிழக்கத்திய நாடுகளுக்கு எதிராக மேற்கத்திய நாடுகளை எதிர்ப்பது, மேற்கத்திய நாடுகளை பழிவாங்குவதற்கான நேரம் அல்ல. இது அனைவரும் கூட்டாக ஒன்றிணைந்து சமத்துவத்தை நிலைநாட்டி, அனைவருக்குமான பொதுவான சவால்களை எதிர்கொள்ள ஒத்துழைக்கும் காலமாகும்” என கூறினார். வெள்ளை மாளிகையின் சுல்லிவன் வெளியிட்ட செய்தியில், “பிரதமர் மோடி கூறியது மிகவும் சரியானது, நியாயமானது. அவரது பேச்சை அமெரிக்கா வரவேற்கிறது” என பாராட்டுத் தெரிவித்தார். மேலும், போருக்கான காலம் இதுவல்ல என புடினை வலியுறுத்திய பிரதமர் மோடியை ஐ.நா சபை மட்டுமின்றி, அமெரிக்கா உட்பட பல நாடுகளின் முன்னணி நாளிதழ்களும் பாராட்டியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.