பா.ஜ.கவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மாள்வியா, இடதுசாரி ஊடகமான ‘தி வயர்’ செய்தி இணையதளம் மீது டெல்லி காவல் துறையில் புகார் செய்தார். அதில், “தி வயர் இணையதளம், எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து செய்திக் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது. இதற்காக பொய்யான ஆவணத்தை அவர்கள் உருவாக்கியுள்ளனர். அதில், பா.ஜ.கவுக்கு எதிரான சமூக ஊடக பதிவுகளை இடைமறித்து நீக்குவதற்கான சிறப்பு வசதியை முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்-அப் தாய் நிறுவனமான ‘மெட்டா’ னக்கு வழங்கி உள்ளதாக செய்தி கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக ‘டெக் பாக்’ என்ற செயலியை பா.ஜ.க பயன்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு மெட்டா நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. எனவே, தி வயர் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தார். இந்தப் புகாரின் பேரில், பல்வேறு பிரிவுகளின் கீழ்முதல் வழக்குப் பதிவு செய்த டெல்லி காவல்துறையினர், தி வயர் நிறுவனர்-ஆசிரியர்களான சித்தார்த் வரதராஜன், எம்.கே.வேணு, சித்தார்த் பாட்டியா மற்றும் துணை செய்திஆசிரியர் ஜான்வி சென் ஆகியோரின் வீடுகள் மற்றும் தி வயர் அலுவலகத்தில் சோதனை நடத்தி சந்தேகத்திற்கிடமான அலைபேசிகள், லேப்டாப்கள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை பறிமுதல் செய்தனர். அவற்றை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தனர். இதனிடையே, இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுப்பதை உணர்ந்த தி வயர், அந்த செய்தி கட்டுரையை அவசர அவசரமாக நீக்கியது. ‘மெட்டா நிறுவனம் குறித்த செய்திக் கட்டுரையின் உண்மைத்தன்மை ஆய்வு செய்தோம். ஆவணங்கள் போலியானவை என தெரியவந்ததால் கட்டுரைகளை நீக்கி விட்டோம். எங்களது முன்னாள் ஆலோசகர் தேவேஷ் குமார் என்பவர் தான் இதற்கு காரணம். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறி தப்பிக்க முயன்றது.