மனதின் குரல் 97வது பகுதி

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இது 2023ம் ஆண்டின் முதல் மனதின் குரல் நிகழ்ச்சி. ஒவ்வொர் ஆண்டும் ஜனவரி மாதத்தில் கணிசமான நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இந்த மாதம் சுமார் 14ம் தேதி வாக்கில் நாடெங்கிலும் பண்டிகைகளின் ஒளி பளிச்சிட்டு வந்தது. இதன் பிறகு தேசம் தனது குடியரசுத் திருநாள் கொண்டாட்டங்களில் திளைத்தது. இந்த முறையும் கூட, குடியரசுத் திருநாள் கொண்டாட்டத்தின் பல பரிமாணங்களுக்குப் பல பாராட்டுக்களும் கிடைத்து வருகின்றன.

பத்ம விருதுகள்:

கள அளவில் தங்களுடைய அர்ப்பணிப்பு மற்றும் சேவை உணர்வால் சாதனைகளைப் புரிவோருக்கு மக்களின் பத்ம விருதுகள் தொடர்பாக பலர் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். இந்த முறை பத்ம விருதால் கௌரவிக்கப்படுவோரில், பழங்குடியினத்தவர்களும், பழங்குடியினத்தவர் வாழ்க்கையோடு தொடர்புடைய நபர்களுக்குமான நல்ல சிறப்பான பிரதிநிதித்துவம் இருக்கிறது. பழங்குடியினத்தோரின் வாழ்க்கை, நகரங்களின் வாழ்க்கையோட்டத்திலிருந்து வேறுபட்டது, அதற்கென சவால்கள் பிரத்யேகமாக இருக்கின்றன. இவற்றைத் தாண்டியும், பழங்குடியினங்கள், தங்கள் பாரம்பரியங்களைப் பாதுகாப்பதில் எப்போதுமே முனைப்பாக இருக்கின்றார்கள். பழங்குடி சமூகங்களோடு இணைந்த விஷயங்களைப் பாதுகாக்கவும், அவற்றின் மீது ஆய்வுகள் மேற்கொள்ளவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டி டோடோ, ஹோ, குயி, குவி, மாண்டா போன்ற பழங்குடி மொழிகளின் மீதான பணிகளில் ஈடுபட்டு வரும் பல பெரியோர்களுக்கு பத்ம விருதுகள் கிடைத்திருக்கின்றன. சித்தி, ஜார்வா, ஓங்கே போன்ற பழங்குடியினத்தவரோடு இணைந்து பணியாற்றியவர்களும் இந்த முறை கௌரவிக்கப்பட்டிருக்கிறார்கள். நக்சல்வாதம் பாதித்திருக்கும் பகுதிகளிலும் கூட, இந்த ஆண்டு பத்ம விருதுகளின் எதிரொலி ஓங்கி ஒலிக்கின்றது. தனது முயற்சிகள் வாயிலாக, நக்சல்வாதம் பாதித்த பகுதிகளில் வழிதவறிப் போன இளைஞர்களுக்கு சரியான பாதையைக் காட்டியுதவியவர்களுக்கு பத்ம விருதுகள் அளித்து கௌரவிக்கப்பட்டிருக்கிறது. அஜய் குமார் மண்டாவீ, பரசுராம் கோமாஜீ குணே, ராமகுயிவாங்கபே நிஉமே, விக்ரம் பஹாதுர் ஜமாதியா, கர்மா வாங்சூ ஆகியோர் கௌரவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

பத்ம விருதுகளால் கௌரவிக்கப்படுவோரில் இசையுலகை சேர்ந்தவர்களும் உள்ளனர். பத்ம விருதுகளைப் பெறும் அநேகம் நபர்கள், நமக்கு மத்தியிலிருந்து வரும் இந்த நண்பர்கள். அவர்கள், எப்போதும் தேசத்தை அனைத்திற்கும் மேலாகக் கருதியவர்கள், தேசமே முதன்மை என்ற கோட்பாட்டிற்காகத் தங்கள் வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணம் செய்தவர்கள்.  அவர்கள் சேவையுணர்வால் தங்கள் பணிகளில் ஈடுபட்டு வந்தார்கள், இதற்காக அவர்கள் என்றுமே விருதுகளை வேண்டவுமில்லை, விரும்பவுமில்லை. யாருக்காக அவர்கள் தங்கள் பணிகளை ஆற்றுகின்றார்களோ, அவர்களின் முகங்களில் இருக்கும் சந்தோஷம் மட்டுமே இவர்களுக்கு மிகப்பெரிய விருதுகள்.  இப்படிப்பட்ட அர்ப்பணிப்பு கொண்டவர்களை கௌரவப்படுத்துவதில், நாம் நாட்டுமக்களின் கௌரவத்தை அதிகப்படுத்துகிறோம். நீங்கள் பத்ம விருதுகளைப் பெற்ற பெரியோரின் கருத்தூக்கமளிக்கும் வாழ்க்கை தொடர்பான விஷயங்களைப் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ளுங்கள், மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லுங்கள்.

ஜனநாயகம்:

நாம் சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவில் குடியரசுத் திருநாள் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் வேளையில், நான் ஒரு சுவாரசியமான புத்தகம் குறித்தும் பேச விரும்புகிறேன். இதில் மிகவும் சுவாரசியமான விஷயம் குறித்துப் பேசப்பட்டிருக்கிறது.  இந்தப் புத்தகத்தின் பெயர் இந்தியா ஜனநாயகத்தின் தாய் (India – The Mother of Democracy) இதில் பல சிறப்பான கட்டுரைகள் இருக்கின்றன. பாரதம் உலகின் மிகப்பெரிய ஜனநாயகம், பாரத நாட்டவர்களான நாம் அனைவரும் நமது தேசம் ஜனநாயகத்தின் தாய் என்ற இந்த விஷயம் குறித்து மிகவும் பெருமிதமும் கொள்கிறோம். ஜனநாயகம் என்பது நமது நாடி நரம்புகளில் இருக்கிறது, நமது கலாச்சாரத்தில் இருக்கிறது. பல நூற்றாண்டுகளாக இது நமது செயல்பாட்டின் ஒரு பிரிக்கமுடியாத அங்கமாகவே விளங்கி வருகிறது. இயல்பாகவே நாம் ஒரு ஜனநாயக சமூகம் தான். டாக்டர். அம்பேத்கர், பௌத்த பிக்ஷு சங்கத்தை, பாரத நாட்டு நாடாளுமன்றத்தோடு ஒப்பிட்டார். கோரிக்கைகள், தீர்மானங்கள், கோரம் என்ற குறைவெண் வரம்பு, வாக்களித்தல், மேலும் வாக்களிக்கப்பட்ட வாக்குகளை எண்ணுதல் தொடர்பாக பல விதிமுறைகள் அதில் இருக்கின்றன. பகவான் புத்தருக்கு இதற்கான கருத்தூக்கம், அவர் காலத்திய அரசியல் முறைகளிலிருந்து கிடைத்திருக்க வேண்டும் என்று பாபாசாஹேப் கருதினார்.

தமிழகத்தின் ஒரு சிறிய, ஆனால் மிகவும் விவாதிக்கப்படும் கிராமம் உண்டு, உத்திரமேரூர். இங்கே சுமார் 1,200 ஆண்டுகள் பழமையான ஒரு கல்வெட்டு, உலகத்தை மலைக்க வைக்கிறது. இந்தக் கல்வெட்டு ஒரு சிறிய அரசியலமைப்புச் சட்டம் போன்றது. கிராமசபையானது எவ்வாறு அமைக்கப்பட வேண்டும், அதன் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறை என்ன என்பன போன்று. நமது தேசத்தின் வரலாற்றில், ஜனநாயக விழுமியங்களின் மேலும் ஒரு எடுத்துக்காட்டு, 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த பஸவேஷ்வரரின் அனுபவ மண்டபம். இங்கே சுதந்திரமான விவாதங்கள், கலந்துரையாடல்கள் ஆகியவற்றுக்கு ஊக்கமளிக்கப்பட்டது. இது மேக்னா கார்ட்டாவை விடவும் பழமையானது. வாரங்கல்லைச் சேர்ந்த காகதீய வம்சத்து அரசர்களின் ஜனநாயகப் பாரம்பரியங்கள் மிகவும் பிரசித்தமானவை. பக்தி இயக்கமானது, மேற்கு பாரதத்திலே, ஜனநாயகக் கலாச்சாரத்தை முன்னெடுத்துச் சென்றது. இந்தப் புத்தகத்திலே, சீக்கிய சமயத்தின் ஜனநாயக உணர்வு பற்றியும் ஒரு கட்டுரை இடம் பெற்றிருக்கிறது. குரு நானக் தேவ் ஜி, அனைவரின் சம்மதத்தோடு மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் பற்றி நமக்குத் தெரிவிக்கப்படுகிறது. மத்திய பாரதத்தின் உராவ், முண்டா பழங்குடியினத்தவர்களின் சமூகத்தால் இயக்கப்படும், ஒருமித்த கருத்தால் மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் பற்றியும் இந்தப் புத்தகத்தில் நல்ல பல தகவல்கள் இருக்கின்றன. நீங்கள் இந்தப் புத்தகத்தைப் படித்த பிறகு, எப்படி நமது தேசத்தின் ஒவ்வொரு பாகத்திலும், பல நூற்றாண்டுகளாக மக்களாட்சியின் உணர்வுகள், ஒரு பிரவாகம் போல பெருக்கெடுத்து ஓடி வந்திருக்கின்றன என்பதை நன்கு உணர்வீர்கள். ஜனநாயகத்தின் தாய் என்ற முறையிலே, நாம், தொடர்ந்து இந்த விஷயத்தைப் பற்றி ஆழமாகச் சிந்திக்க வேண்டும், விவாதிக்க வேண்டும், உலகத்தின் முன்பாக எடுத்துரைக்க வேண்டும். இதனால் தேசத்தின் ஜனநாயக உணர்வு மேலும் ஆழப்படும்.

சிறுதானிய ஆண்டு:

யோகக்கலை தினத்திற்கும், நம்முடைய பலவகையான சிறுதானியங்களுக்கும் இடையே பொதுவான விஷயம் என்னவென்று நான் உங்களிடம் கேட்டால், இவற்றுக்கிடையே என்ன ஒப்புமை காண முடியும் என்று நீங்கள் நினைக்கலாம்? இரண்டுக்கும் இடையே கணிசமான பொதுவான கூறுகள் உண்டு என்று நான் கூறுவேன். ஐ.நா சபையானது சர்வதேச யோகக்கலை தினத்தையும், சர்வதேச சிறுதானிய ஆண்டினையும் பற்றிய தீர்மானத்தை, பாரதம் முன்மொழிந்ததை ஒட்டியே மேற்கொண்டது. யோகக்கலையும் உடல்நலத்தோடு தொடர்புடையது, சிறுதானியங்களும் உடல்நலத்துக்கு மகத்துவமான பங்களிப்பை அளிப்பது. இரண்டுமே மக்கள் இயக்கங்களாக மாறி, மக்கள் பங்கெடுப்பின் காரணமாக புரட்சிகரமான முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. எந்த வகையில் மக்கள் பரவலான முறையில் ஆக்கப்பூர்வமாக பங்கெடுத்து, யோகம் மற்றும் உடலுறுதியைத் தங்களுடைய வாழ்க்கையின் அங்கமாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்களோ, இதைப் போலவே சிறுதானியங்களையும் கூட மக்கள் பெரிய அளவில் ஏற்றுக் கொண்டு வருகிறார்கள். மக்கள் இப்போது சிறுதானியங்களைத் தங்களுடைய உணவுகளில் அங்கமாக ஆக்கிக் கொண்டு வருகின்றார்கள். இந்த மாற்றத்தின் மிகப்பெரிய தாக்கத்தையும் நம்மால் காண முடிகிறது. இதனால் பாரம்பரியமாகவே சிறுதானியங்களை உற்பத்தி செய்து வந்த சிறு விவசாயிகள் மிகவும் உற்சாகம் அடைந்திருக்கிறார்கள். உலகம் இப்போது சிறுதானியங்களின் மகத்துவத்தைப் புரிந்து கொள்ளத் தொடங்கி இருக்கிறது என்பதில் அவர்களுக்கு மகிழ்ச்சி. வேறொரு புறத்தில் விவசாயிகள், உற்பத்தியாளர்கள் சங்கங்களும் தொழில் முனைவோரும் இப்போது சிறுதானியங்களைச் சந்தைப்படுத்துவது, மக்களுக்குக் கிடைக்கச் செய்வது போன்ற முயற்சிகளைச் செய்யத் தொடங்கி விட்டார்கள்.

நான் உங்களிடம் மேலும் ஒரு விஷயம் பற்றிச் சொல்லவா? நீங்கள் எண்டர்ப்ரீனியர் (entrepreneur) என்ற சொல் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள், அதாவது தொழில்முனைவோர். ஆனால் நீங்கள் மில்லட்ப்ரீனியர் (Milletpreneurs) பற்றிக் கேள்விப்பட்டதுண்டா? ஒடிஷாவில் மில்லட்ப்ரீனியர்கள் எனப்படும் சிறுதானியத் தொழில்முனைவோர் இப்போதெல்லாம் செய்திகளில் அதிகமாகக் காணப்படுகிறார்கள். பழங்குடியினத்தவர் மாவட்டமான சுந்தர்கட்டுக்கு அருகே, 1,500 பெண்களின் சுயவுதவிக் குழுவானது, ஓடிஷா சிறுதானியங்கள் இயக்கத்தோடு இணைந்திருக்கிறது. இங்கே இருக்கும் பெண்கள், சிறுதானியங்களில் குக்கீஸ் தின்பண்டம், ரசகுல்லா, குலாப்ஜாமுன், கேக்குகள் போன்றவற்றைத் தயார் செய்கிறார்கள்.  சந்தையில் இவற்றுக்கான தேவை அதிக அளவில் இருக்கும் காரணத்தால், வருவாயும் அதிகரித்து வருகிறது. கர்நாடகத்தின் கலபுர்கி மாவட்டத்தின் ஆலந்த் புதாயி, பீதர் மாவட்டத்தில் உள்ள ஹுல்சூர் போன்ற பகுதிகளின் சிறுதானிய குடியானவர்கள், உற்பத்தி நிறுவனங்களும் சிறுதானியங்களைப் பயிர் செய்வதோடு சிறுதானிய உணவுப் பொருட்கள விற்று வருவாய் ஈட்டி வருகின்றனர். சத்திஸ்கட்டின் சந்தீப் ஷர்மாவின் விவசாயிகள் உற்பத்தியாளர் சங்கம் இன்று, 12 மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளோடு தொடர்புடையதாக இருக்கிறது.

இன்று பாரதத்தின் அனைத்து இடங்களிலும் ஜி20 மாநாடுகள் தொடர்ந்து நடந்தேறி வருகின்றன, தேசத்தின் ஒவ்வொர் இடத்திலும், எங்கெல்லாம் ஜி20 மாநாடு நடந்து வருகிறதோ, அங்கெல்லாம் சிறுதானியங்களில் தயார் செய்யப்பட்ட ஊட்டச்சத்துமிக்க, சுவையான தின்பண்டங்கள் இடம் பெறுவது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. ஜி20க்கான அனைத்து இடங்களிலும் சிறுதானியங்களின் கண்காட்சிகளில், சிறுதானியங்களில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்படும்.  உலகெங்கும் இருக்கும் பாரதத் தூதரகங்களிலும் கூட இவற்றை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  தேசத்தின் இந்த முயற்சியும், உலகில் அதிகரித்துவரும் சிறுதானியங்களின் தேவையும், நமது சிறுவிவசாயிகளுக்கு எத்தனை பலத்தை அளிக்கவல்லது என்பதை கற்பனை செய்து பாருங்கள்.

பர்ப்பில் ஃபெஸ்ட்:

கோவாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் பெயர் பர்ப்பில் ஃபெஸ்ட். ஜனவரி 6 தொடங்கி 8 வரை பனாஜியில் இது நடந்தது.  மாற்றுத் திறனாளிகளின் நலனை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த அருமையான முயல்வில், 50,000த்திற்கும் மேற்பட்ட நமது சகோதர சகோதரிகள் பங்கெடுத்துக் கொண்டார்கள். மீராமார் பீச்சிலே ஆனந்தமாகச் சுற்றித் திரிய முடிந்தது குறித்து, இங்கே வந்திருந்தவர்கள் புளகாங்கிதம் அடைந்தார்கள். அங்கே கிரிக்கெட் போட்டிகள், டேபிள் டென்னிஸ் போட்டிகள், மாரத்தான் போட்டிகளோடு கூடவே, ‘காது கேளாத பார்வையற்றோர் மாநாடு 2023’க்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. பர்ப்பிள் ஃபெஸ்டின் மேலும் ஒரு சிறப்பான விஷயம், இதில் தனியார் துறையும் பங்கெடுத்து வருவது தான். பர்ப்பில் ஃபெஸ்டை வெற்றி விழாவாக ஆக்கியமைக்கும், இதோடு தொடர்புடைய அனைவருக்கும், அனைத்துத் தன்னார்வத் தொண்டர்களுக்கும் பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன்.

உரிமைக்காப்பு:

தேசத்தின் மிகப் பழைமையான அறிவியல் நிறுவனங்களில் ஒன்று, பெங்களூரூவைச் சேர்ந்த இந்திய அறிவியல் நிறுவனம் ஒரு அருமையான விஷயத்தை நமக்கு அளிக்கிறது. இந்த நிறுவனம் நிறுவப்பட்டதன் பின்னணியில், பாரதத்தின் இரண்டு மகத்துவம் பொருந்திய ஆளுமைகளான ஜம்ஷேட்ஜி டாடாவும், சுவாமி விவேகானந்தரும் உத்வேகக் காரணிகளாக இருந்தார்கள். உங்களுக்கும் எனக்கும் ஆனந்தமும், பெருமிதமும் ஏற்படுத்தக்கூடிய விஷயம் என்னவென்றால், 2022ம் ஆண்டில் இந்நிறுவனத்தின் பெயரில் மொத்தமாக 145 காப்புரிமைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. அதாவது, 5 நாட்களுக்கு ஒருமுறை இரண்டு உரிமைக்காப்புகள். இந்தச் சாதனை அற்புதமானது. இந்த வெற்றிக்காக நான் IISc யின் குழுவினருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று உரிமைக்காப்புப் பதிவில், பாரதத்தின் தரவரிசை, 7ம் இடத்திலும் வர்த்தகச் சின்னங்களைப் பொறுத்த மட்டிலே 5வது இடத்திலும் உள்ளது. உரிமைக்காப்புகள் விஷயத்தில் மட்டுமே, கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 50 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. உலகளாவிய கண்டுபிடிப்புக்கள் குறியீட்டிலும் கூட பாரதத்தின் தரவரிசையில் நல்ல மேம்பாடு காணப்படுகிறது. 2015ல் உலகக் கண்டுபிடிப்புகள் குறியீட்டில் பாரதம் 80ம் இடத்தில் இருந்தது. அது இப்போது அது 40ம் இடத்திற்கு வந்து விட்டது. பாரதம் கடந்த 11 ஆண்டுகளில் முதன்முறையாக உள்நாட்டு உரிமைக்காப்புப் பதிவின் எண்ணிக்கை, அயல்நாட்டுப் பதிவை விட அதிகரித்திருக்கிறது. இது பாரதத்தின் அதிகரித்து வரும் விஞ்ஞானத் திறமையையும் காட்டுகிறது. 21ம் நூற்றாண்டின் பொருளாதாரத்தில் அறிவு மிகவும் தலையாயமானது. நமது கண்டுபிடிப்பாளர்களும், அவர்களுடைய காப்புரிமைகளும் பாரதத்தின் டெக்கேட் பற்றிய கனவை கண்டிப்பாக முன்னெடுத்துச் செல்லும், நிறைவேற்றி வைக்கும் என்பது என் நம்பிக்கை.

மின்பொருள் கழிவு மீள்பயன்பாடு:

இன்று அனைத்து இல்லங்களிலும் அலைபேசி, லேப்டாப், டேப்லட் போன்ற கருவிகள் சாதாரணமானவையாகி விட்டன.  நாடெங்கிலும் இவற்றின் எண்ணிக்கை பில்லியன் கணக்கில் இருக்கின்றன. இன்றைய அண்மையான கருவிகள், எதிர்காலத்தின் மின்பொருள் கழிவாகும். எந்தவொரு புதிய கருவியை வாங்கினாலும், பழைய கருவியை மாற்றினாலும், பழைய பொருளை சரியான முறைப்படி கைவிட வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். மின்பொருள் கழிவு சரியான வகையிலே கைவிடப்படவில்லை என்று சொன்னால், நமது சுற்றுச்சூழலுக்கும் இதனால் தீங்கு ஏற்படும். ஆனால் எச்சரிக்கையோடு இது செய்யப்படும் போது, இது மறுசுழற்சி, மீள்பயன்பாடு என்ற வகையில், சுற்றுப் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய பலத்தை அளிக்கிறது. வ்வோர் ஆண்டும் 50 மில்லியன் டன் அளவு மின்பொருள் கழிவு தூக்கிப் போடப்படுகிறது என ஐ.நா அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. பல்வேறு செயல்முறைகள் வாயிலாக இந்த மின்கழிவுப் பொருட்களிலிருந்து, தங்கம், வெள்ளி, செம்பு, நிக்கல் உள்ளிட்ட 17 வகையான விலைமதிப்பற்ற உலோகங்கள் வெளியெடுக்கப்பட முடியும். மின்பொருள் கழிவினை நல்லவகையில் பயன்படுத்துவது என்பது, குப்பையிலிருந்து கோமேதகம் உருவாக்குதை போன்றது. இன்று, இத்திசையில் நூதனமான பணிகளை மேற்கொண்டு வரும் ஸ்டார்ட் அப்புகளுக்குக் குறைவில்லை. அவர்கள் இந்தத் துறையில் ஆயிரக்கணக்கானவர்களுக்கு நேரடியாக வேலைவாய்ப்பை அளித்திருக்கிறார்கள். இதற்கு பல எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன. இவையனைத்தும் பாரதத்தை உலக அளவிலான மறுசுழற்சி மையமாக மாற்ற உதவிகரமாக இருக்கின்றன. என்றாலும், மின் பொருள் கழிவுகளைச் சரியான முறையிலே சமாளிப்பதன் மூலம், பாதுகாப்பான வழிமுறைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வர வேண்டும். தற்போது ஒவ்வொர் ஆண்டும் 15 சதவீதம் வரையிலான மின்பொருள் கழிவுகளை மட்டுமே நம்மால் மறுசுழற்சி செய்ய முடிவதாக தெரிவிக்கின்றனர்.

சதுப்பு நிலங்கள் அதிகரிப்பு:

இன்று உலகெங்கும் சூழல் மாற்றம் மற்றும் உயிரினப் பன்முகத்தன்மையின் பாதுகாப்பு குறித்து அதிகம் பேசப்படுகிறது. இத்திசையில் பாரதத்தின் சிறப்பான முயற்சிகள் குறித்து நாம் தொடர்ந்து பேசி வருகிறோம். பாரதம் தனது சதுப்பு நிலங்களின் பொருட்டு ஆற்றியிருக்கும் பணிகளை நீங்கள் தெரிந்து கொள்ளுதல் நலமாக இருக்கும். சில தினங்கள் கழித்து, பிப்ரவரி 2ம் தேதியன்று உலக சதுப்புநில நாள் வரவிருக்கிறது. நமது பூமியின் இருப்பிற்காக சதுப்புநிலங்கள் மிகவும் அவசியமானவை. ஏனென்றால், இவற்றைச் சார்ந்த பல பறவைகளும், உயிரினங்களும் இருக்கின்றன. இவை உயிரினப் பன்முகத்தன்மையை நிறைவு செய்வதோடு, வெள்ளக் கட்டுப்படுத்தலையும், நிலத்தடி நீரை மீள்நிரப்புவதையும் உறுதி செய்கின்றன. ராம்சர் இடங்கள் போன்ற சதுப்புநிலப் பகுதிகள், சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்தவை. நமது தேசத்தில் இப்போது ராம்சர் இடங்களின் மொத்த எண்ணிக்கை 75 ஆகியிருக்கிறது, 2014ற்கு முன்பாக தேசத்தில் வெறும் 26 ராம்ஸர் இடங்கள் மட்டுமே இருந்தன. இதற்காக வட்டார சமுதாயங்கள் பாராட்டுக்கு உரியவர்கள். இவர்கள் தாம் இந்த உயிரினப் பன்முகத்தன்மையைப் பாதுகாத்தளித்திருக்கிறார்கள். இது இயற்கையோடு கூட நல்லிணக்கத்தோடு வாழும் நமது பல நூற்றாண்டுக்கால பழைமையான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்துக்குக் கிடைத்த ஒரு மரியாதை. பாரதத்தில் ஈரநிலங்களின் இந்த பரவலாக்கம், ராம்சர் பகுதிகளுக்கு அருகிலே வசிப்போரின் காரணமாகவும் அமைந்திருக்கிறது. நான் இந்த மக்கள் அனைவருக்கும் பாராட்டுக்களை, நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.

காஷ்மீர் சுற்றுலா:

இந்த முறை நமது தேசத்தில், குறிப்பாக வட பாரதத்தில், தீவிரமான குளிர் பரவியிருக்கிறது. இந்தக் குளிர்காலத்தில் மக்கள் மலைகளில் பனிப்பொழிவின் ஆனந்தத்தையும் நன்கு அனுபவித்தார்கள். ஜம்மு கஷ்மீரத்திலிருந்து வந்திருக்கும் சில காட்சிகள், மனதைக் கொள்ளை கொண்டு விட்டன. உலகம் முழுவதும் அதிகம் விரும்பப்படுபவையாக இந்தப் படங்கள் ஆகி இருக்கின்றன. பனிப்பொழிவு காரணமாக நமது கஷ்மீரப் பள்ளத்தாக்கு ஒவ்வொர் ஆண்டினைப் போலவும் இந்த முறையும் மிக ரம்மியமானதாக ஆகி விட்டிருந்தது. அழகான பனிப்பொழிவு, நாலாபுறங்களிலும் வெள்ளைப் போர்வையாகப் பனி, ஆஹா. இந்தக் காட்சி, தேவதைகளின் கதைகளில் வருவதைப் போல இருப்பதாக மக்கள் கூறுகிறார்கள். ஒரு சமூகவலைத்தள பயன்பாட்டாளர் எழுதுகிறார்: ‘இதைவிட அதிக அழகாகவா சுவர்க்கம் இருக்கும்?’ இது மிகவும் சரி தான்.  அதனால் தானே கஷ்மீரத்தை, பூமியின் சுவர்க்கம் என்கிறார்கள். நீங்களும் இந்தப் படங்களைக் கண்டு கஷ்மீரத்திற்குச் சுற்றுலா மேற்கொள்ள நினைப்பீர்கள் என்று நான் நன்கறிவேன். நீங்களும் செல்லுங்கள், உங்கள் நண்பர்களையும் அழைத்துச் செல்லுங்கள். அனு அதிகமாகக் காண வேண்டியவை, தெரிந்து கொள்ள வேண்டியவை பற்பல இருக்கின்றன.  கஷ்மீரின் சையதாபாதில் பனிக்கால விளையாட்டுக்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எனதருமை நாட்டுமக்களே, குடியரசினை மேலும் பலமுடையதாக ஆக்கும் முயற்சிகளில் தொடர்ந்து நாம் ஈடுபட்டுவர வேண்டும். மக்களின் பங்களிப்பால், அனைவரின் முயற்சியால், தேசத்தின் பொருட்டு அவரவர் தங்களுடைய கடமைகளை செவ்வனே ஆற்றும் போது மட்டுமே குடியரசு பலமாக இருக்க முடியும். நமது மனதின் குரல் இப்படிப்பட்ட கடமையுணர்வு மிக்க போராளிகளின் பலமான பெருங்குரல் என்பது, எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது. அடுத்த முறை மீண்டும் சந்திப்போம், கடமையுணர்வு கொண்டவர்களின் சுவாரசியமான, உத்வேகம் அளிக்கும் கதைகளோடு. பலப்பல நன்றிகள்.