மனதின் குரல்

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். ஆகஸ்ட் மாதம் உங்கள் அனைவருடைய கடிதங்கள் என் அலுவலகத்தை மூவர்ணமயமாக்கி விட்டன. மூவர்ணம் இல்லாத ஒரு கடிதம்கூட வரவில்லை என்று சொல்லலாம். குழந்தைகள், இளைஞர்கள் என அனைவரும் அமுதப் பெருவிழா பற்றிய அழகான ஓவியங்களை அனுப்பியுள்ளனர். அமுதப் பெருவிழா, சுதந்திரத் திருநாள் என்ற சிறப்பான சந்தர்ப்பத்தில் நாம் தேசத்தின் சமூக சக்தியை தரிசனம் செய்தோம். ஒரு விழிப்புணர்வு நிலையை அனுபவிக்க முடிந்தது. அதேபோல தூய்மை இயக்கத்தின் போதும், தடுப்பூசி இயக்கத்தின் போதும் தேசத்தின் உணர்வையும் ஊக்கத்தையும் நம்மால் காண முடிந்தது. நமது ராணுவ வீரர்கள், உயரமான சிகரங்களில், தேசத்தின் எல்லைகளில், கடல்களுக்கு நடுவில் மூவர்ணக் கொடியைப் பறக்க விட்டார்கள். பாரதத்தில் மட்டுமல்ல, உலகின் பிற நாடுகளிலும் பாரத சுதந்திரத்தின் 75 ஆண்டுகளைக் கொண்டாடும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கெடுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.  அங்கே அவர்கள் ‘ஸ்வராஜ்’ என்ற ஒரு தொலைக்காட்சித் தொடரைக் காட்சிப்படுத்தினார்கள். சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்த, இதுவரை கேள்விப்படாத நாயகர்கள், நாயகிகளின் முயற்சிகளை, தேசத்தின் இளைய தலைமுறையினருக்கு அடையாளம் காட்டும் சிறப்பான இந்த முயற்சி தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. நீங்கள் அனைவரும் சற்று நேரம் ஒதுக்கி, இதைக் காணுங்கள், வீட்டில் உள்ள குழந்தைகளும் இதைக் காண ஊக்கப்படுத்துங்கள். பள்ளி, கல்லூரிகளில் இதன் ஒளிப்பதிவினை, திங்கட்கிழமையன்று சிறப்பு நிகழ்ச்சியாக காட்சிப்படுத்தலாம். நமது தேசத்தில் இதன் மூலம் ஒரு புதிய விழிப்புணர்வு ஏற்படும்.

நமது சம்ஸ்கிருதத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முன்பாக நீர், நீர் பாதுகாப்பின் மகத்துவம் விளங்க வைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஞானத்தை தேசமானது, தனது வல்லமை என்ற வகையிலே ஏற்றுக்கொள்ளும் போது, அதன் சக்தி பலமடங்கு அதிகரிக்கிறது. மனதின் குரலில், நான்கு மாதங்கள் முன்பாக அமிர்த நீர்நிலை பற்றி பேசினோம். அதன் பிறகு பல்வேறு மாவட்டங்களில் அமிர்த நீர்நிலை உருவாக்கப்பட்டு இது ஒரு மக்கள் இயக்கமாகப் பரிமளித்தது. உங்களிடத்தில், குறிப்பாக என்னுடைய இளைய நண்பர்களிடத்திலே வேண்டுகோள் என்னவென்றால், நீங்கள் அமிர்த நீர்நிலை இயக்கத்தில் பெரிய அளவில் பங்கெடுங்கள், நீர் சேமிப்பு, நீர்ப் பாதுகாப்புக்கான இந்த முயற்சிகளிலே முழுவீச்சோடு உங்கள் பங்களிப்பை அளியுங்கள், அதை முன்னெடுத்துச் செல்லுங்கள்.

அஸ்ஸாமில் போங்காயி கிராமத்திலே ‘ப்ராஜெக்ட் சம்பூர்ணம்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு எதிரான போராட்டம் இது. இந்தப் போராட்டத்தின் வழிமுறை தனித்தன்மை வாய்ந்தது. இதன்படி, ஒரு அங்கன்வாடி மையத்தில் ஒரு ஆரோக்கியமான குழந்தையின் தாய், ஊட்டச்சத்துக் குறைவான குழந்தையின் தாய் ஒருவரை, ஒவ்வொரு வாரமும் சந்தித்து, ஊட்டச்சத்துக் குறைபாடு தொடர்பான அனைத்துத் தகவல்களைப் பற்றியும் விவாதிக்கிறார்கள். இதனால் இப்பகுதியில் ஓராண்டில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாடு நீங்கிவிட்டது.

இதேபோல மத்திய பிரதேசத்தின் ததியா மாவட்டத்தில் ‘என்னுடைய குழந்தை இயக்கம்’ என்ற இயக்கத்தில் பஜனைப் பாடல்கள், கீர்த்தனைகள் ஆகியவற்றின் மூலம் ஊட்டச்சத்து விழிப்புணர்வு ஊட்டப்படுகிறது. ஜார்க்கண்டின் கிரிடீஹிலே பாம்பும் ஏணியும் என்ற வித்தியாசமான பரமபத விளையாட்டு உருவாக்கப்பட்டது. இந்த விளையாட்டின் வாயிலாகப் பிள்ளைகள், நல்ல மற்றும் தீய பழக்கங்களைப் பற்றிக் கற்றுக் கொள்கிறார்கள். ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு எதிராக தேசத்தின் பல படைப்பாற்றலுடன், பன்முகமான முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. லட்சக்கணக்கான ஆங்கன்வாடிப் பணியாளர்களுக்கு மொபைல் கருவிகள் அளிப்பது தொடங்கி ஆங்கன்வாடி சேவைகள் சென்று சேர்வதை கண்காணிப்பதற்காக Poshan Tracker என்ற ஊட்டச்சத்து கண்காணிப்பாளர் செயலியும் உருவாக்கப்பட்டிருக்கிறது.

சென்னையிலிருந்து ஸ்ரீதேவி வரதராஜன், ‘மைகவ்’ தளத்தில் எனக்கு ஒரு நினைவூட்டல் செய்தியை அனுப்பி இருக்கிறார். அதில், “புத்தாண்டு பிறக்க இன்னும் 5 மாதங்களுக்கும் குறைவான காலமே எஞ்சி இருக்கிறது. வரவிருக்கும் புத்தாண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டால நாம் கொண்டாட இருக்கிறோம்” என்று தெரிவித்து, தேசத்தின் சிறுதானிய வரைபடம் ஒன்றை எனக்கு அனுப்பி இருக்கிறார். நாட்டுமக்களின் இத்தகைய ஆர்வங்களைப் பார்க்கும் போது எனக்கு மிகுந்த ஆனந்தம் ஏற்படுகிறது.  ஐ.நா சபை,, 2023ம் ஆண்டினை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்தது. பாரதத்தின் இந்த முன்மொழிவிற்கு 70க்கும் மேற்பட்ட நாடுகளின் ஆதரவு கிடைத்தது. இன்று உலகெங்கிலும் இதே சிறுதானியங்களின் மீதான பேரார்வம் அதிகரித்து வருகிறது.

நாம் சிறுதானியங்கள் பற்றிப் பேசும் போது, எனது ஒரு முயற்சியையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கடந்த சில காலமாகவே நாட்டிற்கு எந்த ஒரு அயல்நாட்டு விருந்தினர் வந்தாலும், உணவில் பாரதத்தின் சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட பதார்த்தங்களை அவர்களுக்கு உண்ண அளிக்க முயற்சிக்கிறேன். அவர்களுக்கு இது மிகவும் பிடித்துப் போய் விடுகின்றன. நமது சிறுதானியங்கள் பற்றிய பல தகவல்களைத் திரட்டவும் அவர்கள் முயற்சி செய்கிறார்கள். சிறுதானியங்கள் என்பவை பண்டைய காலம் தொட்டே நமது விவசாயம், கலாச்சாரம், நாகரிகம் ஆகியவற்றின் அங்கமாக இருந்து வருகின்றன. நமது வேதங்களிலும் சிறுதானியங்கள் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.

புறநானூறு, தொல்காப்பியத்திலும் கூட, இவற்றைப் பற்றி கூறப்பட்டிருக்கிறது. நீங்கள் தேசத்தின் எந்த ஒரு பாகத்திற்குச் சென்றாலும், அங்கே இருக்கும் மக்களின் உணவு முறைகளில், பல்வேறு வகையான சிறுதானிய வகைகள் இடம் பெற்றிருப்பதை உங்களால் காண முடியும். நமது கலாச்சாரத்தைப் போலவே, சிறுதானியங்களிலும் கூட பலவகைகள் காணக் கிடைக்கின்றன. வரகு, சோளம், சாமை, ராகி, கம்பு, தினை, குதிரைவாலி போன்றவை சிறுதானியங்கள் இல்லையா!  பாரதம் உலகிலேயே சிறுதானியங்களின் பெரிய ஏற்றுமதியாளர்; ஆகையால் இந்த முயற்சியை வெற்றி பெறச் செய்ய பெரும் பொறுப்பு பாரத நாட்டவரான நம் அனைவரின் தோள்களிலும் இருக்கிறது.  நாம் அனைவரும் இணைந்து இதை ஒரு மக்கள் இயக்கமாக ஆக்க வேண்டும், நாட்டு மக்களிடம் சிறுதானியங்கள் தொடர்பான விழிப்புணர்வையும் அதிகரிக்க வேண்டும்.

சிறுதானியங்கள் விவசாயிகளுக்கும் அதிக இலாபகரமானது. மிகக் குறைந்த நேரத்தில் அறுவடைக்கு தயாராகி விடும், நீருக்கான தேவையும் அதிகமில்லை. நமது சிறிய விவசாயிகளுக்கு, சிறுதானியங்கள் ஆதாயமளிப்பவை. சிறுதானியங்களின் காய்ந்த தழைகள் மிகச் சிறப்பான தீவனமாகவும் கருதப்படுகிறது. இன்றைய இளைய தலைமுறையினர் ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் உணவுமுறை தொடர்பாக மிகவும் கவனமாக இருக்கிறார்கள். இந்தக் கோணத்தில் பார்த்தால், சிறுதானியங்களில் புரதச்சத்து, நார்ச்சத்து, கனிமச்சத்து ஆகியன நிறைவான அளவில் இருக்கின்றன. பலர் இதை சூப்பர் உணவு என்றும் கூறுகிறார்கள்.

சிறுதானியங்களில் பல ஆதாயங்கள் இருக்கின்றன. உடல் பருமனைக் குறைப்பது, நீரிழிவு, உயர் ரத்த அழுத்த, இருதயம் தொடர்பான நோய்களை குறைக்கிறது. வயிறு, கல்லீரல் தொடர்பான நோய்களிலிருந்து காப்பாற்ற உதவுகிறது. ஊட்டச்சத்துக் குறைபாட்டோடு போராடவும் சிறுதானியங்கள் கணிசமான உதவி புரிகின்றன. தேசத்தில் இன்று சிறுதானியங்களுக்கு ஊக்கம் அளிக்க, நிறைய விஷயங்கள் செய்யப்படுகின்றன. இவற்றோடு தொடர்புடைய ஆய்வுகள், கண்டுபிடிப்புகள் மீது கவனம் செலுத்தப்படுவதோடு, விவசாயிகள், உற்பத்தியாளர் சங்கங்களுக்கு ஊக்கமளிக்கப்பட்டு வருகிறது. விவசாய சகோதர சகோரிகளிடம் என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால், சிறுதானியங்களை நீங்கள் அதிக அளவு பயிர் செய்ய வேண்டும், ஆதாயம் பெற வேண்டும்.

இன்று பல ஸ்டார்ட் அப்புகள் கூட, சிறுதானியங்கள் துறையில் பணி புரிவதைக் காணும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தத் துறையில் பணிபுரியும் அனைவருக்கும் நான் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பண்டிகைகளுக்கான இந்த வேளையில் நாம் நமது பல தின்பண்டங்களிலும் சிறுதானிய வகைகளைப் பயன்படுத்துகிறோம். உங்கள் வீடுகளில் தயாரிக்கப்படும் தின்பண்டங்களின் படங்களை சமூக ஊடகங்களில் நீங்கள் கண்டிப்பாகப் பகிருங்கள்; மக்கள் மத்தியில் சிறுதானியங்கள் தொடர்பான விழிப்புணர்வு அதிகரிக்க இது உதவியாக இருக்கும்.

எந்த வசதிகள், ஒரு காலத்தில் நகரங்களில் மட்டுமே இருந்தனவோ, அவை எல்லாம் டிஜிட்டல் இந்தியா மூலமாக கிராமந்தோறும் கொண்டு சேர்க்கப்பட்டிருக்கின்றன. இதன் காரணமாக தேசத்திலே டிஜிட்டல் தொழில்முனைவோர் உருவாகி வருகின்றார்கள். நண்பர்களே, கிராமங்களிலிருந்து எனக்கு நிறைய செய்திகள் கிடைக்கின்றன, இணையம் காரணமாக ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை எனக்கு இவை தெரிவிக்கின்றன.  இணையத்தால் நமது இளைய நண்பர்களின் படிப்பு, கற்றல் முறைகளிலும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. கிராமந்தோறும் இப்படி பலரது வாழ்க்கை, டிஜிட்டல் இந்தியா இயக்கத்தினால் புதிய சக்தியை அடைந்து வருகிறது. நீங்களும், கிராமங்களில் இருக்கும் டிஜிட்டல் தொழில்முனைவோர் பற்றி எனக்கு அதிக அளவில் எழுதுங்கள், அவர்களின் வெற்றிக் கதைகளை சமூக ஊடகங்களில் கண்டிப்பாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

சுதந்திரத் திருநாளின் மகத்தான தினத்தோடு கூடவே, வரவிருக்கும் காலத்தில் மேலும் பல முக்கியமான தினங்கள் வரவிருக்கின்றன.  இன்னும் சில நாட்கள் கழித்து பிள்ளையார் சதுர்த்தி வரவிருக்கிறது.  பிள்ளையார் சதுர்த்தி என்பது கணபதியின் ஆசிகளுக்கான தினம். பிள்ளையார் சதுர்த்திக்கு முன்னதாக ஓணம் பண்டிகையும் தொடங்க இருக்கிறது.  விசேஷமாக, கேரளத்தில் ஓணம் என்பது அமைதி, வளம் ஆகிய உணர்வுகளோடு கொண்டாடப்படுகிறது. ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி என்பது ஹர்தாலிகா தீஜும் கூட. ஓடிஷாவிலே செப்டம்பர் மாதம் 1ம் தேதியன்று நுஆகாயி பண்டிகையும் கொண்டாடப்படும். இது மற்ற பிற பண்டிகைகளைப் போலவே, நமது விவசாயப் பாரம்பரியத்தோடு தொடர்புடைய பண்டிகை. ஜைன சமூகத்தின் சம்வத்சரி மகத்துவம் வாய்ந்த திருநாளும் வருகிறது. நமது இந்த அனைத்துத் திருநாட்களும், நமது கலாச்சார வளத்தையும், உயிர்ப்புத் தன்மையையும் அடையாளப்படுத்துகின்றன.  உங்களனைவருக்கும், இந்தப் பண்டிகைகளுக்கும், சிறப்பான நாட்களுக்காகவும் என்னுடைய நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் திருநாட்களோடு கூடவே, மேஜர் தியான்சந்த் அவர்களின் பிறந்த நாளான, ஆகஸ்ட் மாதம் 29ம் தேதியான நாளைய தினத்தை தேசிய விளையாட்டு தினமாக நாம் கொண்டாடுவோம். நமது இளைய விளையாட்டு வீரர்கள், சர்வதேசக் களங்களில் நமது மூவண்ணத்தின் பெருமையைப் பரப்பி வருகின்றார்கள், இதுவே நமது தியான்சந்த் அவர்களுக்கு நாம் செலுத்தக்கூடிய சிரத்தாஞ்சலிகளாக இருக்க முடியும். தேசத்தின் பொருட்டு நாமனைவரும் இணைந்து புரியும் செயல்கள், தேசத்திற்குப் பெருமை சேர்த்து வரட்டும்.