மனத்தின் குரல்

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். சில நாட்களுக்கு முன்பாகத் தான் தேசம் ஒரு சாதனையைப் படைத்திருக்கிறது, இது நம்மனைவருக்கும் உத்வேகம் அளிக்கவல்லது. இம்மாதம் 5ம் தேதியன்று தேசத்தின் யூனிகார்ன்களின் எண்ணிக்கை 100 என்ற எண்ணிக்கையை எட்டி விட்டது. ஒரு யூனிகார்ன் என்பது குறைந்தபட்சம் 7,500 கோடி ரூபாய் மதிப்பிலான ஸ்டார்ட் அப். இந்த யூனிகார்ன்களின் மொத்த மதிப்பு ரூ. 25 இலட்சம் கோடிக்கும் அதிகம். உலகளாவிய பெருந்தொற்று காலகட்டத்திலும் கூட, நமது ஸ்டார்ட் அப்கள், செல்வத்தையும், மதிப்பையும் உருவாக்கி வந்திருக்கின்றன. இந்திய யூனிகார்ன்களின் சராசரி வருடாந்தர வீதம், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற பிற நாடுகளை விட அதிகம். வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்பது ஆய்வாளர்களின் முடிவு. ஸ்டார்ட் அப்கள் உலகம், புதிய இந்தியாவின் உணர்வைப் பிரதிபலிக்கிறது. சின்னச்சின்ன நகரங்களில் இருந்தும் கூட தொழில்முனைவோர் முன்வருகிறார்கள்.  பாரதத்திலே புதுமையான எண்ணம் இருக்கிறது, அதனால் செல்வத்தை உருவாக்க முடியும் என்பதையே இது காட்டுகிறது. ஸ்டார்ட் அப்களை முன்னே கொண்டு செல்லும் பொருட்டு, தங்களையே அர்ப்பணித்திருக்கும் பல வழிகாட்டிகள் பாரதத்திலே இருக்கிறார்கள் என்பது பெருமிதம் தரும் விஷயம்.

ஸ்ரீதர் வேம்புவுக்கு இப்போது தான் பத்ம விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டது. அவர் ஒரு வெற்றிகரமான தொழில் முனைவோர் என்றாலும், தற்போது, மேலும் பல தொழில் முனைவோர்களை உருவாக்குவது என்ற சவாலை அவர் மேற்கொண்டிருக்கிறார். தனது பணியை ஊரகப் பகுதியிலே தொடங்கியிருக்கிறார். ஊரகப் பகுதி இளைஞர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். மதன் படாகீ, மீரா ஷெனாய் போன்றவர்களும் கூட, ஊரகப்பகுதி தொழில் முனைவோருக்கு ஊக்கம் அளிக்கும் பொருட்டு பணியாற்றி வருகின்றனர்.

தமிழகத்தின் தஞ்சாவூரைச் சேர்ந்த ஒரு சுயஉதவிக் குழு எனக்கு ஒரு பரிசினை (தஞ்சாவூர் பொம்மை) அனுப்பி இருக்கிறது. இந்தப் பரிசில் பாரத நாட்டின் மணம் வீசுகிறது, தாய்மை சக்தியின் ஆசிகள் நிரம்பியிருக்கின்றன. என் மீது அவர்கள் கொண்டிருக்கும் நேசமும் பாசமும் கனிவை ஏற்படுத்துகின்றன. அதற்கு புவிசார் குறியீடு கூட இதற்குக் கிடைத்திருக்கிறது. அவர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தஞ்சாவூர் பொம்மை எத்தனை அழகானதாக இருக்கிறதோ, அத்தனை அழகானது, பெண்களின் அதிகாரப் பங்களிப்பின் புதிய காதை. தஞ்சாவூர்ப் பெண்கள் 22 சுயஉதவிக் குழுக்கள் இணைந் ஒரு அங்காடியையும் திறந்திருக்கிறார்கள். பெண்களின் வருவாய் அதிகரிப்பதால் அவர்களின் அதிகாரப் பங்களிப்பும் ஏற்படுகிறது. நேயர்களே, உங்கள் பகுதியில் உள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை அதிகம் பயன்படுத்துங்கள். இதனால், நீங்கள் சுயஉதவிக் குழுக்களுடைய வருமானத்தை அதிகரிக்க உதவுவதோடு, தற்சார்பு பாரத இயக்கத்திற்கும் வேகமளிப்பீர்கள்.

நமது தேசத்திலே பல்வேறு மொழிகள், எழுத்து வடிவங்கள், வழக்கு மொழிகள் என, இது ஒரு நிறைவான பொக்கிஷம்.  பல்வேறு பகுதிகளில் பல்வேறு ஆடைகள், உணவுமுறைகள், கலாச்சாரம்….. இவையே நமது அடையாளம். இந்தப் பன்முகத்தன்மை, இந்த வேற்றுமை, ஒரு தேசம் என்ற வகையிலே, நம்மை மேலும் ஆற்றல் படைத்தவர்களாக ஆக்குவதோடு, இணைத்தும் வைக்கின்றது.

உத்தராகண்டின் சார்தாம் புனித யாத்திரை நடைபெற்று வருகிறது. கேதார்நாத்திலே ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கே குழுமுகின்றனர். மக்கள் தங்களுடைய சார்தாம் யாத்திரை பற்றிய சுகமான அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கின்றனர். சில பயணிகள் ஏற்படுத்தும் மாசு காரணமாக, பக்தர்களுக்கு வருத்தமும் ஏற்படுகிறது. நாம் புனித யாத்திரையை மேற்கொள்ளும் போது, அங்கே குப்பைக்கூளமாக இருந்தால் அது சரியல்ல.

சிலர் தாங்கள் தங்கியிருக்கும் இடத்துக்கருகே தூய்மைப் பணியை மேற்கொள்கிறார்கள். சிலரோ பயணப் பாதையில் இருக்கும் குப்பைக்கூளங்களையும் துப்புரவு செய்கிறார்கள். தூய்மை பாரத இயக்ககுழுவோடு இணைந்து பல அமைப்புக்களும், சுயசேவை அமைப்புக்களும் கூட பணியாற்றுகின்றன. தல சேவையில்லாமல், தலயாத்திரை என்பது முழுமை அடையாது. அமர்நாத் யாத்திரை, பண்டர்புர் யாத்திரை, ஜகன்னாதர் யாத்திரை போன்ற பல யாத்திரைகள் வரவிருக்கின்றன. நாம் எங்கே சென்றாலும், இந்தப் புனிதத் தலங்களின் மாட்சிமையை பாதுகாக்க வேண்டும்.  தூய்மை, சுத்தம், புனிதமான சூழலை பராமரிப்பதை நாம் என்றுமே மறந்து விடக் கூடாது, அதைக் கட்டிக் காக்க வேண்டும்,

ருத்ர பிரயாகையில் வசிக்கும் மனோஜ் பேன்ஜ்வால், குப்தகாசியில் வசிக்கும் சுரேந்திர பக்வாடி போன்றோர் தூய்மை இயக்கத்தைச் செயல்படுத்துவதோடு கூடவே, புனிதத் தலங்களை, நெகிழிப் பொருட்களிலிருந்து விடுவிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். தேவர் கிராமத்திலே சம்பாதேவி தனது உழைப்பின் காரணமாக ஒரு பசுமையான வனத்தையே உருவாக்கியிருக்கிறார்.

ஜூன் மாதம் 5ம் தேதியன்று உலக சுற்றுச் சூழல் நாளை நாம் கொண்டாடவிருக்கிறோம். சுற்றுச்சூழல் தொடர்பாக நாம் நமது அக்கம்பக்கத்திலே ஆக்கப்பூர்வமான இயக்கத்தைச் செயல்படுத்த வேண்டும். இது தொடர்ந்து நாம் செய்யக்கூடிய பணி. நீங்கள், இந்த முறை அனைவரோடும் இணைந்து தூய்மைக்காகவும், மரம் நடுதலுக்காகவும், சில முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

அடுத்த மாதம், அதாவது ஜூன் மாதம் 21ம் தேதியன்று நாம் 8ஆவது சர்வதேச யோகக்கலை தினத்தைக் கொண்டாடவிருக்கிறோம். இம்முறை யோகக்கலை தினத்தின் மையக்கரு, ‘மனித சமூகத்துக்காக யோகக்கலை’ என்பதே.  யோகக்கலை தினத்தை உற்சாகத்தோடு கொண்டாடுங்கள். கொரோனா முன்னெச்சரிக்கைகளை கடைப்பிடியுங்கள். நமது வாழ்க்கையிலே ஆரோக்கியம் மகத்துவம் வாய்ந்தது. யோகக்கலை நம் உடல் நலத்தைப் பாதுகாக்கும் வலிமையான சாதனம் என்பதை, கொரோனா நமக்கு புரிய வைத்துள்ளது. இம்முறை நம் நாட்டிலும், வெளிநாடுகளிலும் யோகக்கலை தினம் ‘கார்டியன் ரிங்’படி கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது, உலகின் பல்வேறு பாகங்களில் சூரியன் எங்கெல்லாம் பயணிக்கிறதோ அங்கு நாம் யோகக்கலை வாயிலாக சூரியனுக்கு வரவேற்பளிப்போம். பல்வேறு நாடுகளில் இருக்கும் இந்தியத் தூதரகங்கள், அங்கே உள்ளூர் நேரத்திற்கேற்ப, சூரியோதய வேளையில் யோகக்கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ஒன்றன் பின் ஒன்றாக ஒவ்வொரு நாட்டிலும் நிகழ்ச்சிகள் தொடங்கும். ஒரு வகையில், இது தொடர் யோகக்கலை நிகழ்வாக இருக்கும்.

நமது நாட்டிலே இந்த முறை அமுதப் பெருவிழாவைக் கருத்திலே கொண்டு, தேசத்தின் 75 முக்கியமான இடங்களில் சர்வதேச யோகக்கலை தின ஏற்பாடுகள் நடைபெறும். இந்த முறை யோகக்கலை தினத்தைக் கொண்டாட, நீங்கள், உங்களுடைய நகரத்தில், பகுதியில் அல்லது கிராமத்தில் ஏதோ ஒரு சிறப்பான இடத்தைத் தேர்வு செய்யுங்கள். இதனால் யோகக்கலையோடு கூடவே உங்கள் பகுதியின் அடையாளமும் மிகுந்து, சுற்றுலாவுக்கும் ஊக்கம் கிடைக்கும்.

சில நாட்கள் முன்பாகத் தான் நான் ஜப்பான் நாட்டிற்குச் சென்றிருந்தேன். பல நிகழ்ச்சிகளுக்கு இடையே, சில அற்புதமான மனிதர்களைச் சந்தித்தேன். அவர்கள் ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றாலும், பாரத நாட்டிடம் இவர்களுக்கு அலாதியான ஒரு ஈடுபாடும், பாசமும் இருந்தன.

தான் என்ற நிலையிலிருந்து உயர்ந்து சமூகத்திற்கான சேவை எனும் மந்திரம், சமுதாயத்திற்காக நான் எனும் மந்திரம் ஆகியவை நமது நற்பண்புகளின் ஓர் அங்கம். நமது தேசத்திலே எண்ணிலடங்காதோர் இந்த மந்திரத்தைத் தங்களுடைய வாழ்க்கைக் குறிக்கோளாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒருவர் ராம்பூபால் ரெட்டி. அவர் பணி ஓய்வு பெற்ற பிறகு தனக்குக் கிடைத்த அனைத்துப் பணத்தையும், பெண் குழந்தைகள் கல்விக்காக தானமளித்து விட்டார் என்ற தகவல் உங்களுக்கு ஆச்சரியமளிக்கலாம்.

இதே போன்ற சேவைக்கான மேலும் ஒரு எடுத்துக்காட்டு உத்தரபிரதேசத்தின் ஆக்ராவின் கசோரா கிராமத்தில் சுவையான குடிநீர்க்குத் தட்டுப்பாடு இருந்தது. அந்த கிராமத்திலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தனது வயலில் குன்வர் சிங் என்ற விவசாயிக்கு சுவையான குடிநீர் கிடைத்தது. அந்த நீரை கிராமவாசிகளோடு பகிர்ந்து கொள்ள நினைத்தார். ஆனால் அதற்கு 30 லட்சம் ரூபாய் செலவாகும். குன்வர் சிங்கின் இளைய சகோதரன் ஷ்யாம் சிங், ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றபோது கிடைத்த பணம் அனைத்தையும் இதற்காக அளித்தார். கிராமம் வரை குழாய் இணைப்பை ஏற்படுத்தி மக்களுக்கு சுவையான குடிநீர் கிடைக்கச் செய்தார். ஈடுபாடு இருந்தால், தனது கடமைகள் மீது அர்ப்பணிப்பு இருந்தால், ஒரு தனிமனிதனாலும் கூட, சமுதாயத்தின் எதிர்காலத்தை எப்படி மாற்ற முடியும் என்பதற்கு இந்த முயற்சி மிகப்பெரிய ஒரு கருத்தூக்கம்.

மனத்தின் குரலில் சமூகத்தோடு தொடர்புடைய பல்வேறு விஷயங்களை ஆலோசனைகளை அனுப்பி வருகிறீர்கள், மனத்தின் குரலின் அடுத்த பதிப்பிற்கான உங்களுடைய அருமையான ஆலோசனைகளை அனுப்ப மறந்து விடாதீர்கள். நமோ செயலியிலும், மைகவ் செயலியிலும் நீங்கள் உங்கள் ஆலோசனைகளை அனுப்புங்கள், காத்துக் கொண்டிருப்பேன்.  அடுத்த முறை நாம் மீண்டும் சந்திப்போம். நீங்கள் உங்களை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள், உங்கள் அருகில் இருக்கும் அனைத்து ஜீவராசிகளையும் பராமரியுங்கள். கோடைக்காலமான இப்போது நீங்கள் பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் உணவும் குடிநீரும் அளிப்பது என்பதை, மனித இனத்துக்கான பொறுப்பாக எண்ணிக் கடைப்பிடியுங்கள்.