வடகிழக்கு பாரதம் எப்போதுமே சுற்றுலாவில் ஈர்ப்பு மையமாக இருந்து வருகிறது. குறிப்பாக ‘பாரதத்தின் நகை’ என்று அழைக்கப்படும் மணிப்பூர், மனதைக் கவரும் வகையில் தனித்துவமான இடங்களைக் கொண்டுள்ளது. மணிப்பூரில் உள்ள ஒரு சந்தை, அதன் வளமான கலாச்சாரம் மற்றும் வரலாற்றைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இது இந்த மாநிலத்தை மற்றவற்றிலிருந்து வேறுபடுத்துகிறது. இமா கெய்தெல் அல்லது மதர்ஸ் மார்க்கெட் என்ற இடம் மணிப்பூர் தலைநகர் இம்பாலின் குவைரம்பந்தில் அமைந்துள்ளது. இது சுமார் 500 ஆண்டுகள் பழமையான உலகின் மிகப்பெரிய பெண்களுக்கான பிரத்தியேக சந்தையாக அறியப்படுகிறது. திருமணமான பெண்கள் மட்டுமே இங்கு வியாபாரம் செய்ய முடியும் என்ற ஒரு விசித்திர விதி இந்த சந்தையில் உள்ளது. இத்தகைய பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகள் பல ஆண்டுகளாக மற்றும் பல நூற்றாண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இங்கு, தற்போது சுமார் 5,000 பெண்கள் தங்கள் கடைகளை வைத்து வியாபாரம் செய்ய உரிமம் பெற்றுள்ளனர். குடும்பத்தில், ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு, இந்த உரிமங்கள் கைமாறி வருகின்றன. 16ம் நூற்றாண்டில் இது சொற்பமான சிறிய கடைகள் மற்றும் மக்களுடன் தோன்றியதாக வரலாற்றாசிரியர்கள் நம்புகின்றனர்.
வரலாற்று நூல்களின்படி, அன்றைய மணிப்பூர் ராஜ்ஜியத்தில் ‘லல்லுப் கபா’ என்ற பெயரில் கட்டாய ராணுவ முறை திணிக்கப்பட்டது. இதன் கீழ் சமூகத்தைச் சேர்ந்த அனைத்து ஆண்களும் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ராணுவத்தில் பணியாற்ற வேண்டும். அனைத்து ஆண்களும் ராணுவத்தில் சேர்ந்ததால், பெண்கள் தங்கள் குடும்பங்கள் தொடர்ந்து வாழ்வாதாரத்தை ஈட்டுவதற்கு இதனை சிறிய அளவில் துவங்கினர். மேலும் அங்கு, குடும்பத்தின் வருமானம் மற்றும் வாழ்வாதாரத்தை ஆண்கள் மட்டுமே உறுதி செய்கிறார்கள் என்பதை பெண்கள் உடைத்த ஒரு நிகழ்வாகவும் இது அறியப்படுகிறது.
பின்னர், இமா கெய்தெல் சந்தை முழுக்க முழுக்க பெண்களுக்கான சந்தையாக அங்கீகரிக்கப்பட்டது. தனித்துவமான குணாதிசயங்கள் மற்றும் அந்தஸ்து கொண்ட பெண் வணிகர்கள் மாநிலத்தின் பெருமை என்று மணிப்பூர் அரசு நம்புகிறது. அவர்களின் தொழில் முனைவோர் திறன்களை மேம்படுத்தி அவர்களைப் பாதுகாத்தும் ஊக்குத்தும் வருகிறது.
இது குறித்து மாவட்ட அதிகாரிகள் கூறுகையில், ‘தொழில் தொடங்க விரும்பும் திருமணமான பெண்கள், தொழிற்சங்கத்தில் கடன் பெற்று தங்கள் கடைகளை இங்கு அமைக்கலாம். தொழிற்சங்கத்திற்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு கடன்களை திருப்பிச் செலுத்தலாம். ஒரு பெண்கள் சங்கம் முழு சந்தையையும் மேற்பார்வையிடுதல், கட்டுப்படுத்துதல், நிர்வகித்தல், கண்காணித்தல் ஆகியவற்றை மேற்கொள்கிறது. இது நியூ மார்க்கெட், எமா மார்க்கெட் மற்றும் லக்ஷ்மி மார்க்கெட் என மூன்று கட்டடங்களாக பிரிக்கப்பட்டு கிட்டத்தட்ட மூன்று கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது. இம்பால் முனிசிபல் கவுன்சில் இந்த இடத்தை மேம்பாடு மற்றும் பராமரிப்புக்காக கவனித்து வருகிறது’ என தெரிவித்தனர்.