உண்மை நடுநிலை வேண்டும்

கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் 12ம் வகுப்பு மாணவி, பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததால் தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதே காலகட்டத்தில், கடலூர் மாவட்டம் வீராரெட்டிகுப்பம் கிராமத்தில், அமலா சிறுவர், சிறுமிகள் காப்பகம் மற்றும் தனியார் பள்ளி நடத்தி வரும் 65 வயதான ஜேசுதாஸ் ராஜா என்பவர் அங்கு உள்ள மாணவிகள் 3 பேருக்கும் பாலியல் தொல்லை கொடுத்த்தால் அந்த சிறுமியர் மூவரும் மாயமாகினர். அவர்களை காவல்துறை தேடி கண்டுபிடித்து விசாரித்ததில் ஜேசுதாஸ் ராஜாவின் கயமைத்தனம் வெளியானது.

கோவை மாணவியின் உயிர் இழப்புக்கு நீதி கேட்டு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர், எஸ்.டி.பி.ஐ, தந்தை பெரியார் தி.க, ம.ஜ.க உள்ளிட்ட ஏராளமான அமைப்புகளும் கட்சிகளும் இணைந்து ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம், பள்ளியில் போராட்டம் என ஈடுபட்டனர். ஆனால், கடலூர் சம்பவத்திற்கு எதிராக அவர்கள் போராட்டம் நடத்தவில்லை என்பதுடன் அவர்கள் சிறிய அளவில் கருத்துகூட தெரிவிக்கவில்லை.

இரண்டுமே மிகவும் தவறான சம்பவங்கள்தான். இரண்டுக்கும் நீதி வழங்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இந்த இடதுசாரி ஜனநாயக மாதர் சங்கத்தினரும் இந்திய மாணவர் சங்கத்தினரும் ஒரு சம்பவத்திற்கு மட்டும் குரல் கொடுத்து மற்றொன்றை மறப்பது ஏன் என்பதை மக்கள் சிந்தித்தால் எளிதில் விளங்கும். காரணம் வேறொன்றும் இல்லை, கோவை சம்பவம் நடைபெற்றது ஒரு ஹிந்து கல்வி நிறுவனம். ஆனால், கடலூர் சம்பவம் நடைபெற்றதோ சிறுபான்மை கிறிஸ்தவ நிறுவனம். இதேபோல, சில நாட்களுக்கு முன்பாக நடைபெற்ற மேலப்பாளையம் முஸ்லிம் பள்ளி வழக்கு விவகாரத்திலும் இவர்கள் நிலைப்பாடு இதுதான்.

எந்த ஒரு தவறையும் மத ரீதியாகவோ ஜாதி ரீதியாகவோ மறைக்கப் பார்ப்பதும், பெரிதாக்குவதும் தவறு. இதற்கு மக்களும் அரசும் காவல்துறையும் துணைபோவது மாபெரும் தவறு.

மதிமுகன்