அனைத்து மாநில முதல்வர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ‘பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. ஆனால், தமிழகம், மேற்கு வங்கம், தெலுங்கானா, மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் வரி குறைக்கப்படவில்லை. மத்திய அரசின் வார்த்தைகளுக்கு இம்மாநிலங்கள் செவி சாய்க்கவில்லை. வாட் வரியை குறைக்காமல் மாநில மக்களை கூடுதல் சுமைக்கு இவை ஆளாக்குகின்றன. இதனால் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிக்கிறது. இது அங்குள்ள மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி. இதனால், அம்மாநில மக்கள் அவதியடைந்து வருகின்றனர். மக்களின் நலன், தேசிய நலன் கருதி வரியை குறைக்க வேண்டும்’ என்று பேசினார். மேலும், ‘கோடைக்காலம் என்பதால் மருத்துவமனைகளில் தீ விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதுகாப்பு நெறிமுறைகளை ஆய்வு செய்யவேண்டும். நாட்டில் குழந்தைகள் மத்தியிலான கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் 6-12 வயதினருக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தும் பணி நாளை தொடங்குகிறது’ என்று கூறினார்.