டுவிட்டர் விற்பனையில் முட்டுக்கட்டை

உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், டுவிட்டர் சமூக வலைத்தளத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்க முடிவு செய்தார். ஆனால், டுவிட்டர் நிறுவனம் தெரிவித்ததை போன்று 5 சதவீத போலி கணக்குகள் மட்டுமே இருப்பற்கான ஆதாரத்தை டுவிட்டர் நிர்வாகம் காட்டாவிட்டால் தனது ஒப்பந்தம் அடுத்தகட்டத்துக்கு நகராது என எலான் மஸ்க் எச்சரித்துள்ளார். இதன் மூலம் எலான் மஸ்க் டுவிட்டரை வாங்கும் நடவடிக்கையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து கருத்து பதிவிட்ட எலான் மஸ்க், “அப்படியென்றால் விளம்பரதாரர்கள் தங்கள் பணத்திற்கு என்ன பெறுகிறார்கள் என்பதை எப்படி அறிவார்கள்? இது டுவிட்டரின் நிதி நிலைக்கு அடிப்படையான ஒன்று. டுவிட்டர் தளத்தில் இருக்கும் கணக்குகளில் சுமார் 20 முதல் 25 சதவீதம் கணக்குகள் போலியானதாக இருக்கும் என நினைக்கிறேன். இது குறித்து ரேண்டம் சோதனைகள் நடத்தி வருகிறோம். இதுவரை நடந்த சோதனையில் டுவிட்டர் நிறுவனம் கூறியதை போல போலிக் கணக்குகள் 5 சதவீதம் மட்டுமே உள்ளது என்பதை நிரூபிக்க எவ்வித ஆதாரங்களும் இல்லை. சில நாட்களில் தினசரி ஆக்டிவ் யூஸர்களில் 90 சதவீதம்வரை கூட போலிக் கணக்குகள் இருக்க வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளார்.