அக்னிபத் ராணுவ ஆள்சேர்ப்பு திட்டத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக உத்தரபிரதேச காவல்துறை இதுவரை 1,562 பேரை கைது செய்துள்ளது என அம்மாநில கூடுதல் காவல்துறை இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) பிரசாந்த் குமார் தெரிவித்துள்ளார். மேலும், ‘இது தொடர்பாக, 29 மாவட்டங்களில் 82 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதைத்தவிர, கான்பூர், ஃபிரோசாபாத், அலிகார், ஹத்ராஸ், மொராதாபாத், அம்பேத்கர் நகர் ஆகிய 10 மாவட்டங்களில், முன்னாள் பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவின் கருத்து தொடர்பாக ஜூன் 3 மற்றும் ஜூன் 10 ஆகிய தேதிகளில் நிகழ்த்தப்பட்ட வன்முறை தொடர்பாக 424 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது இதுவரை இருபது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன’ என தெரிவித்தார்.