காங்கிரசின் உண்மை நோக்கம் வெளிவந்தது

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ‘பாரத் ஜோடோ’ யாத்திரையின் ஒரு பகுதியாக நடிகர் கமல்ஹாசனுடன் சந்தித்து பேசினார். இது கடந்த 2019ல் நடிகர் அக்ஷய் குமார், பிரதமர் மோடியை பேட்டி எடுத்ததை காப்பி அடிப்பதாக உள்ளது என சமூக ஊடக பயனர்களால் வெகுவாக கிண்டலடிக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில், ராகுல் காந்தியின் பேட்டி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. தேசிய செய்தி தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி, “ராகுல் காந்தி குழப்பம் அடைந்தவராக மட்டுமின்றி, தனது ‘பாரத் ஜோடோ’ யாத்திரையால் குழப்பத்திற்கு அவர் இரையாகி விட்டார் என்றே நான் உணர்கிறேன். அவருக்கு உண்மையான அறிவு தேவை என நினைக்கிறேன். ஆனால், இந்த பேட்டியில் காங்கிரசின் உண்மை நோக்கம் வெளிவந்து இருப்பது மிக நல்லது. காங்கிரஸ் ஆட்சி செய்தபோது நடந்தது போலவே, சீனாவின் முன் பாரதம் சரணடைய வேண்டும் என்ற ராகுலின் நோக்கத்தையும் விருப்பத்தையும் அவர் தெளிவுப்படுத்தி இருக்கிறார். ரஷ்யா மற்றும் உக்ரைன் போரை பற்றி பேசிய ராகுல், மேற்கத்திய நாடுகளுடன் இருக்க உக்ரைன் விரும்புகிறது. அதனால், அதன் புவியியல் அமைப்பை மாற்ற ரஷ்யா விரும்புகிறது என்று கூறுகிறார். அதைத்தொடர்ந்து, பாரதம் மற்றும் சீனா இடையேயும் இதே சூழல் நிலவுகிறது. மேற்கத்திய நாடுகளுடன் இணைய பாரதம் விரும்புகிறது. நமது புவியியல் அமைப்பும் மாறும் என ராகுல் கூறுகிறார். இதன் மூலம் ராகுல் காந்தி என்ன கூற விரும்புகிறார்? என்று திரிவேதி கேள்வி எழுப்பினார்.