ராமநாரதபும் சிவஞான புறத்தைச் சேர்ந்தவர் அசோக் குமார் . இவர் ஆர் எஸ் மடை பகுதியைச் சேர்ந்த கொக்கி குமார் உடன் சேர்ந்து கட்டப்பஞ்சாயத்து, கொலை, கொள்ளை போன்ற ரவுடித் தொழிலைக் கூட்டாக செய்துள்ளார். இதற்கிடையில் அசோக் குமார் கொக்கி குமாரிடம் இருந்து பிரிந்து தனியாக தனது ‘தொழிலை’ தொடங்கி கொக்கி குமாரின் உறவினரான சந்துருவின் கடையில் புகுந்து, அவரை வெட்டும் அளவிற்கு வளர்ந்துள்ளார். இதனைப் பொறுக்காத கொக்கி குமார் அசோக்குமாரை பழி தீர்க்கக் காத்திருந்தார். சந்துருவின் வழக்கில் ஜாமினில் வெளிவந்த அசோக் குமார், தினமும் ராமநாதபுரம் கோர்ட்டில் வந்து கையெழுத்திடும் நிபந்தனையோடு வெளிவந்துள்ளார். இதனை அறிந்த கொக்கி குமார் நீதிமன்ற வளாகத்திலேயே வைத்து, அவரை தீர்த்துக் கட்ட அங்கு சென்றுள்ளார். காத்திருப்போர் அறையில் காத்திருந்த அசோக்குமார் கொக்கி குமாரைக் கண்டு பயந்து ஓடி நீதிமன்றத்திற்குள் தஞ்சம் புகுந்துள்ளார். அங்கேயே புகுந்து அவரை சரமாரியாக வெட்டி சாய்த்து விட்டு ஒரு மோட்டார் பைக்கில் தப்பிச் சென்றுள்ளார் கொக்கி குமார். இந்தத் தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அசோக்குமாரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொக்கி குமாரை அதி விரைவாக அவரது மொபைல் போன் சிக்னலை வைத்து சைபர் க்ரைம் மூலம் கண்டுபிடித்து முட்டிக்கு கீழ் சுட்டு கைது செய்துள்ளனர் காவல்துறையினர்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு, ரவுடியிசம், கொலை, கொள்ளை, கஞ்சா கடத்தல் போன்ற விஷயங்களில் அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். நீதிமன்ற வளாகத்திற்கு உள்ளேயே உயிர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் பொதுமக்கள் தெருவில் நடப்பதற்கே அச்சப்படும் அவலநிலை நேர்ந்து விடும்.
பீகாரைப் பாரு, உபியைப் பாருனு கேலி செய்த காலம் மாறி அந்த மாநிலங்கள் பெரும் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்ட இந்நாளில்,
“அமைதிப்பூங்கா” வாக இருந்த தமிழகத்தில் இதுபோன்ற வன்முறை கோர சம்பவங்கள் இனி நடைபெறாமல் தடுப்பதற்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமோ அவற்றை துரிதமாக அரசு எடுக்க வேண்டும்.
– சுமதி மேகவர்ணம் பிள்ளை