மாரியப்பனுடன் பேசிய பிரதமர்

டோக்கியோ பாராலிம்பிக் போட்டி வரும் 25ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் செப்டம்பர் 6ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பாரதத்தின் சார்பில், 9 விளையாட்டு போட்டிகளில் இதுவரை இல்லாத அளவிற்கு 54 பேர் பங்கேற்கின்றனர். பாராலிம்பிக் குழுவினருடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்துரையாடுகிறார். அவ்வகையில், பெங்களூருவில் பயிற்சி பெற்று வரும் தமிழக தடகள வீரர் மாரியப்பனுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்துரையாடினார். சேலத்தில் இருந்து மாரியப்பன் குடும்பத்தினரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். மாரியப்பனுக்கு என்ன உணவு பிடிக்கும் என பிரதமர் கேட்டதற்கு, ‘நாட்டுக்கோழி சூப் மிகவும் பிடிக்கும்’ என அவரது தாயார் பதில் அளித்தார். முன்னதாக, டோக்கியோ பாராலிம்பிக்கில் பதக்கம் வெல்லுபவர்களுக்கு இந்த ஆண்டு தேசிய விளையாட்டு விருதுகள் பரிசளிக்கப்படும். டோக்கியோ ஒலிம்பிக்கில் பாரத அணி சிறப்பாக செயல்பட்டது போல, வரவிருக்கும் பாராலிம்பிக்கிலும் சிறப்பாக செயல்படும் என்று எதிர்பார்க்கிறோம் என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்திருந்தார்.