தமிழகத்தில் விலைவாசி உயர்வு என்பது நாளுக்கு நாள் உச்சம் தொட்டு வருகிறது. கடந்த சில தினங்களாக காய்கறிகளின் விலை உயர்வை தொடர்ந்து, சமையலுக்கு பயன்படுத்தப்படக்கூடிய பருப்பு வகைகள், எண்ணெய் உள்ளிட்ட எல்லா பொருட்களும் விலை உயர்ந்து வருகிறது. இந்நிலையில் அரிசி, சோளம் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை இம்மாதம் 18ம் தேதி முதல் 5 சதவீத ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வருவதற்கான அறிவிப்பை ஜிஎஸ்டி கவுன்சில் வெளியிட்டது. அத்தியாவசியப் பொருட்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவதால் அரிசி உள்ளிட்டவற்றின் விலை உயரும் என பல்வேறு தரப்பினர் கணித்திருந்தனர். இந்நிலையில், சில மாதங்களுக்குப் முன்பு ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ள அரிசியின் விலையானது, தற்போது 60 ரூபாயாக உயர்ந்துள்ளது. 5 கிலோ மூட்டை கடந்த மாதத்தில் ரூ.1,400 ஆக இருந்த நிலையில், அவை தற்போது ரூ.1,600 ஆகவும், 2-வது ரக சாப்பாட்டு அரிசி ரூ.1,200-ல் இருந்து ரூ.1,400 ஆகவும் அதிகரித்துள்ளது. மளிகை பொருட்கள் விலையை தொடர்ந்து அரிசி விலையும் உயர்ந்ததால் மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். உள்நாட்டில் உற்பத்தி குறைவு மற்றும் போதிய கையிருப்பு இல்லாததால் வெளிநாடுகளுக்கு பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை வித்துள்ளது. இதனால் அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் அரிசி தட்டுப்பாடுகள் நிலவியதால், அங்கு வாழும் இந்தியர்கள் வரிசையில் நின்று அரிசியை வாங்கி செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வணிகர்கள், பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.