காலத்தை வென்ற கவிஞர்

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை நாகர்கோயில் அருகில் உள்ள தேரூரில் பிறந்தார். பள்ளிக்கூடத்தில் மலையாளமே கற்பிக்கப்படும் சூழ்நிலையில், சாந்தலிங்கத் தம்பிரான் என்ற துறவியிடம் தமிழைப் பயின்றார்.

இளமைப் பருவத்தில் கோயில் ஒன்றில் கொடை காணச் சென்றார் தேசிக விநாயகம் பிள்ளை. அங்கே ஆட்டினைப் பலி கொடுக்கும் காட்சியைக் கண்ட அவருக்கு நெஞ்சம் உருகியது. அந்த உருக்கத்தில் அவர் பாடிய கவிதை மொழிகள், கொல்லாமையை போதித்தன. பின்நாளில் உமையம்மாள் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

நாகர்கோயிலில் நகண்கோட்டாற்றில் தொடக்கப் பள்ளி ஆசிரியராக பணியாற்றினார். ஆங்கிலப் புலமையும் ஆழ்ந்த தமிழ்ப் புலமையும் மிக்க அவர் பின்னர் கல்லூரி ஆசிரியராகவும் பணியாற்றினார். குழந்தைகளுக்கு ஏற்ற பாடல்கள் தமிழில் பல உண்டு. எனினும் குழந்தைகளே எளிதில் பொருள் புரிந்து பாடும் பாடல்களே தேசிக விநாயகம் பிள்ளையால் பாடப்பட்டது.

சொல் அமுதாய் இனிக்கும் எளிமையும் இனிமையும் நிறைந்த ‘மலரும் மாலையும்’ என்ற கவிதைத் தொகுப்பை கவிமணி வழங்கினார். அதனால் தமிழறிஞர்கள் குழு அவருக்கு ‘கவிமணி’ என்ற பட்டத்தை வழங்கியது. அத்தொகுதியில் “அப்பம் திருடின எலி”, “பசுவும் கன்றும்”, “பொம்மைக் கலியாணம்” போன்றவை இளம் பிள்ளைகளுக்கு மகிழ்வைத் தருவதோடு உலக நடைமுறைகளையும் ஊட்டின.

நாகர்கோவிலுக்கு வந்த ராஜாஜி கவிமணியைக் காண விரும்பினார். அவருடன் வந்தவர்கள் கவிமணியை அழைத்து வரப்புறப்பட்டனர். ஆனால் ராஜாஜி, அவரை தானே நேரில் சென்று காண்பதே மரியாதை எனக் கூறினார். புத்தேரிக்கு வந்து கவிமணியை அரசவைப் புலவராக அமர்த்தி அழகு பார்க்க நினைத்தார். திருவிதாங்கூர் வேற்று மாநிலம் ஆனதால் சட்டச் சிக்கல் எழுந்தது. அதையும் தாண்டி அவரை அப்பணியில் ஈடுபட சென்னை மாகாண அரசு அன்றைக்கு வழி வகுத்தது. எனினும் அப்பதவியைப் பெற மறுத்ததோடு அரசவைப் புலவராய் அமர தன்னைவிட நாமக்கல் கவிஞரே ஏற்றவர் எனப் பரிந்துரை செய்தார் கவிமணி.

இன்று கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பிறந்த தினம்.