காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கொரோனாவைக் காரணம் காட்டி, மேற்கு வங்கத்தில் தான் கலந்துக்கொள்ள இருந்த தேர்தல் பொதுக்கூட்டங்கள், பேரணிகளை ரத்து செய்தார். மேலும், மற்ற கட்சித் தலைவர்களையும் கூட்டங்களை ரத்து செய்ய வேண்டுகோள் விடுத்தார். ஆனால், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ராகுல் சொன்னதற்கு நேர்மாறாக அதே நாளில், மேற்கு வங்கத்தில் பல தேர்தல் கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளார்.
தனது கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக நைடா விதான் சபா தொகுதி, மல்டா தொகுதி போன்ற இடங்களில் நடைப்பெற்ற பேரணிகளில், காங்கிரஸ் கூட்டணியில் உள்ள இடதுசாரிகள், அப்பாஸ் சித்திகியின் ஐ.எஸ்.எஃப் கட்சியினரும் கலந்துக்கொண்டுள்ளனர். இந்தப் புகைப்படங்களை ஆதிர் ரஞ்சன் சவுத்ரியே தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
என்னதான் முயற்சி செய்தாலும் தனது கூட்டணி பத்து முதல் இருபது இடங்கள்கூட பிடிக்க முடியாது என்பதை நன்கு உணர்ந்துள்ள ராகுல், அதனை மறைக்க கொரோனாவைக் காரணம் காட்டி நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளார். ஆனால், அவரது கட்சியினரும் கூட்டணியினரும் தொடர்ந்து பிரச்சார நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர். இது ராகுல்காந்தி தனது வெற்று அறிவிப்புகள் மூலமாக சமூக ஊடகங்களில் பாராட்டுக்களைப் பெறுவதற்கான ஒரு தந்திரமாகவே தோன்றுகிறது.
இதே போன்று தங்களது பேரணிகளை ரத்து செய்வதாக கூறிக்கொண்டே திருணமூல் காங்கிரஸ் கட்சியினர் கூட்டங்கள் நடத்தி வருகின்றனர். மாட்டாமல் இருக்க தங்கள் கூட்டங்களின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுவதைத் தவிர்த்து விடுகிறார்கள் இவர்கள்.
மக்கள் இவர்களை முற்றிலுமாக புறக்கணிக்க முடிவு செய்துள்ள நிலையில், என்னதான் இவர்கள் அபாரமாக நடித்தாலும் வாக்குப்பதிவில் இவர்களுக்கு ஓட்டு விழுமா என்பது சந்தேகமே.