ஜிஹாத் கருத்தை திரும்பப் பெற வேண்டும்

கொல்கத்தாவில் 1993ல் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில், திருணமூல் காங்கிரஸ்  ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 21 அன்று ‘ஷாஹீத் திவாஸ்’ என்ற பெயரில் பேரணியை நடத்துகிறது. அசன்சோலில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் வெளியிடப்பட்ட வீடியோவில் பேசிய அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி, ஜூலை 21 அன்று பா.ஜ.கவுக்கு எதிரான ஜிஹாத்தை அறிவிப்போம். மாநிலத்தில் இருந்து பா.ஜ.கவை அகற்றுவோம் என பேசியிருந்தார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

“மாற்று கருத்துகள் கொண்டோருக்கு எதிரான தாக்குதலுக்கான முழக்கம் இது. மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு பா.ஜ.கவினரையும் பொதுமக்களையும் மமதா கொல்லப்போகிறாரா என பா.ஜ.கவின் ஐடி விங் பொறுப்பாளர் அமித் மாளவியா கண்டித்தார். எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி தலைமையிலான 10 பேர் கொண்ட பா.ஜ.க குழுவினர் அம்மாநில ஆளுநரை சந்தித்து இதுகுறித்து முறையிட்டனர்.

இதையடுத்து ஆளுநர் ஜக்தீப் தன்கர், மமதாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “வீடியோவில் வெளியான அறிக்கை, மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இது அரசியலமைப்பு  மீதான அராஜகத்தை குறிக்கிறது. அரசியலமைப்புச் சட்டப் பிரமாணத்தின்படி முதலமைச்சர் பதவியேற்ற ஒருவர் எப்படி ஒரு அரசியல் கட்சிக்கு எதிராக இத்தகைய நெறியற்ற ‘ஜிஹாத்’ அறிவிப்பை வெளியிட முடியும்? இது ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு அடிக்கும் சாவுமணி. இதைவிட எதேச்சதிகாரம் மற்றும் ஜனநாயகமற்றதாக எதுவும் இருக்க முடியாது. உங்கள் கூற்றுக்கு என்னால் விதிவிலக்கு கொடுக்க முடியாது. ஜனநாயக விழுமியங்கள் மற்றும் அரசியலமைப்பு வாதத்திற்கு அடிபணிந்து இத்தகைய கருத்தை திரும்பப் பெற வேண்டும்” என எழுதியுள்ளார்.