விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தைச் சேர்ந்த சகோதரர்கள் சந்தானம், சபரிமலை ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்’ராஜபாளையம், திருப்பணிமலையில் உள்ள கல் குவாரியில் கற்களை வெட்டியெடுக்க வெடிமருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.இதனால் ஊர், ஊர் மக்கள், நீர்நிலை, பாதைகள்என அனைத்து வகையிலும் பாதிப்பு ஏற்படுகிறது.எனவே குவாரி செயல்பட தடை விதிக்க வேண்டும்’ எனக் கோரியிருந்தனர்.இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்து, ‘மலைகள், மலைக்குன்றுகள், காடுகள், ஆறுகள் ஆகியன இயற்கையின் கொடை.இவற்றை எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாக்க வேண்டும்.சுனாமியின்போது மாங்குரோவ் காடுகள் இயற்கை அரணாக இருந்தன.அதேபோல் மலைகள்தான் கிராமங்களின் பாதுகாப்பு அரண்.எனவே, மலைகளை அழிக்க உரிமம் வழங்குவதை நிறுத்த வேண்டும்.தற்போது வெடி வைத்து மலையில் பாதியளவு தகர்க்கப்பட்டுவிட்டது.மேலும் தொடர்ந்தால் மலை முழுமையாக அழிக்கப்படும்.எனவே, அங்கு குவாரி உரிமம் ரத்து செய்யப்படுகிறது’ என உத்தரவு பிறப்பித்தார்.