தஞ்சாவூரில் பத்திரிகையாளர்களை சந்தித்த வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடம், செய்தியாளர் ஒருவர், “கடந்த ஆட்சியில் நெல் கொள்முதலுக்கு மூட்டைக்கு ரூ.40 லஞ்சம் வாங்கப்பட்டது. அது இப்போது ஒழிக்கப்படுமா என்ற ரீதியில் கேள்வி எழுப்பினார். அதற்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் “நீ இப்படி கிறுக்குத்தனமாகக் கேள்வி கேட்டால், நானும் கிறுக்குத்தனமாகத்தான் பதில் சொல்ல வேண்டியதிருக்கும்” மிகவும் கண்ணியக் குறைவாக பதில் அளித்துள்ளார். இது பத்திரிகையாளர்களையும் விவசாயிகளையும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், மேட்டூர் அணை திறப்பு தொடர்பாக, தஞ்சையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். ஆனால், அமைச்சர் பன்னீர்செல்வம், எந்த ஒரு கோரிக்கை தொடர்பாகவும் வாய் திறக்கவில்லை. ‘பட்டுக்கோட்டையில் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் பல கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டு மூடிவைக்கப்பட்டுள்ள தென்னை வணிக வளாகத்தை திறக்க வேண்டும்’ என, விவசாயி வீரசேனன் என்பவர் வலியுறுத்தினார். இக்கோரிக்கை குறித்தும் அமைச்சர் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. இதனால் விவசாயிகளின் கடும் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளார் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். அமைச்சரின் இந்தச் செயல்களுக்கு உடனடியாக, அவர் மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பில் இருந்தும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.