மத்திய பிரதேச மாநிலம், இந்தூரைச் சேர்ந்தவர், 15 வயது மாணவியான தனிஷ்கா சுஜித். கடந்த 2020ம் ஆண்டில் கொரோனா பெருந்தொற்றில் தனது தந்தையையும், தாத்தாவையும் இழந்தார். படிப்பில் மிகத் திறமைசாலியான அவர், தனது வாழ்வில் அடுத்தடுத்து ஏற்பட்ட இழப்புகளையும் தாண்டி வாழ்க்கையில் சாதிக்க உறுதி பூண்டார். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நிலையில், தனது 13 வயதிலேயே 12ம் வகுப்புத் தேர்வை நேரடியாக எழுதி தேர்ச்சி பெற்றார். பின்னர், இந்தூர் தேவி அகில்யா பல்கலைக் கழகம் நடத்திய நுழைவுத் தேர்வில் இவர் நல்ல மதிப்பெண்கள் பெற்றார். இதனால், சிறப்பு தேர்வாக இவருக்கு பி.ஏ. உளவியல் படிப்பு படிக்க அனுமதி வழங்கப்பட்டது. இப்போது இவர் தனது பி.ஏ. இறுதி ஆண்டுத் தேர்வை வரும் 19ம் தேதி முதல் எழுதவுள்ளார். மத்தியப் பிரதேசம் தலைநகர் போபாலுக்கு, பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் சென்றபோது அவரை சந்திக்கும் வாய்ப்பு தனிஷ்கா சுஜித்துக்கு கிடைத்தது. அந்தச் சந்திப்பு தனக்கு புதிய உத்வேகத்தைத் தந்துள்ளதாக மாணவி தனிஷ்கா சுஜித் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பிரதமர் மோடி போபாலுக்கு வந்தபோது, அவரை 15 நிமிடம் சந்தித்து பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நான் பி.ஏ. தேர்ச்சி பெற்ற பின்னர் அமெரிக்காவில் சட்டப்படிப்பு படிக்க விரும்புவதைத் பிரதமரிடம் தெரிவித்தேன். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஆவதுதான் எனது எதிர்காலக் கனவு என்றும் கூறினேன். எனது லட்சியம் பற்றி அக்கறையுடன் கேட்ட பிரதமர், என்னை நீதிமன்றத்துக்கு சென்று வழக்கறிஞர்கள் வாதாடுவதை கவனிக்குமாறு ஆலோசனை கூறினார். அது, எனது லட்சியம் நிறைவேறுவதற்கான ஊக்கத்தை அளிக்கும் என்று தெரிவித்தார். பிரதமரைச் சந்திக்க வேண்டும் என்ற எனது கனவு நிறைவேறியுள்ளது” என்றார்.