காங்கிரசுக்கு உதவும் ஊடகங்கள்

மத்திய அரசையும் பிரதமர் மோடியையும் குறிவைத்து சமீபத்தில் காங்கிரஸ் வெளியிட்டதாக, கருவித் தொகுப்பு (டூல்கிட்) ஒன்று சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. ‘இது பொய்யானது’ என காங்கிரஸ் தெரிவித்தாலும் ‘அதில் கூறப்பட்டுள்ளவற்றின் படியே ராகுல் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் செயல்படுகின்றனர் எனவே அது உண்மையானதுதான்’, ‘காங்கிரஸ் கொரோனா போன்ற ஒரு தேசிய நெருக்கடியின் போது, ​​இதுபோன்ற மலிவான அரசியலில் ஈடுபடுவது தவறு’ என சமூக ஊடகங்களில் காங்கிரசுக்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இதனால் தர்மசங்கட நிலைக்கு ஆளான காங்கிரஸ், டுவிட்டருக்கு ஒரு கடிதம் எழுதியது. அதில், பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, பா.ஜ.க தலைவர்கள் சம்பித் பத்ரா, பி.எல்.சந்தோஷ் ஆகியோர், போலி ஆவணத்தை பகிர்ந்து கொண்டதாகக் கூறி, அவர்களது டுவிட்டர் கணக்குகளை நிரந்தரமாக நிறுத்திவைக்கக் கோரியிருந்தது. எதிர்பார்த்தபடியே டுவிட்டரும் அவர்களது இடுகைகளை ‘கையாளப்பட்ட ஊடகங்கள்’ (manipulated media) எனக் குறித்துள்ளது. இது குறித்த தனது ட்வீட்டில், ‘காங்கிரஸ் கட்சி தனது நட்பு பத்திரிகையாளர்கள் மற்றும் செல்வாக்கு செலுத்துபவர்களின் உதவியுடன் மக்கள் தொடர்பு வேலையை செய்கிறது’ என பத்ரா குற்றம் சாட்டியிருக்கிறார். இதற்கிடையில், காங்கிரஸ் கட்சிக்கு நல்ல பெயரை ஏற்படுத்தவும், எதிரான குற்றச்சாட்டுகளை மறைக்கவும் ‘ஆல்ட் நியூஸ்’ என்ற பிரச்சார வலைத்தளம் களமிறக்கப்பட்டது. ஆனால், அவசரத்தில், ஆல்ட் நியூஸ் அதன் ‘உண்மைச் சரிபார்ப்பு’ (Fact Check) நிகழ்ச்சியை சொதப்பியதுடன், டூல்கிட் ஆவணத்துடன் காங்கிரஸ் கட்சியின் தொடர்புகளையும் அம்பலப்படுத்திவிட்டது.