மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை கடந்த ஆட்சியில் தமிழக அரசு கொண்டு வந்தது. இந்த சட்டத்தை எதிர்த்து அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு செல்லும். உள் ஒதுக்கீடு வழங்குவதை 5 ஆண்டுகளுக்கு பின் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து, உள் ஒதுக்கீடு சட்டத்திற்கு எதிராக அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் தொடர்ந்த வழக்குகள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது.