தி.மு.க அரசை விமர்சனம் செய்து கருத்து தெரிவித்ததற்காக ஹிந்து உணர்வாளர் ஜான் ரவியை கைது செய்தது கடும் கண்டனத்திற்குரியது என இந்து முன்னணி மாநில செய்தித் தொடர்பாளர் இளங்கோவன் கூறியுள்ளார். மேலும், “ஆளும் அரசை விமர்சித்தால் கொஞ்சம் கூட பொறுக்காமல் உடனடியாக கைது நடவடிக்கையில் இறங்குகிறது காவல்துறை. ஈரோடு இடைதேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுப்பது கண்டு உலகம் முழுவதும் தமிழக மானம் காற்றில் பறக்கிறது. அதை தடுக்க திமுக அரசின் காவல்துறைக்கு துப்பில்லை. சாதாரண டுவிட்டர் பதிவிற்காக விமானத்தில் குஜராத் சென்று ஜான் ரவி கைது செய்யப்படுகிறார். கோவை கார் வெடிகுண்டை சிலிண்டர் வெடிப்பு என சில்லரைத்தனமாக பேசிய வாய்கள், ஆளும் ஹிந்து விரோத தி.மு.க அரசிற்கு எதிராய் சீறி எழும்பும் கருத்துக்களை எதிர்கொள்ள வக்கற்று காவல்துறையை ஏவல்துறையாக்கி உணர்வுள்ள ஹிந்துக்களை மிரட்ட பார்க்கிறது. ஹிந்துக் கடவுளர்களை இழிவுபடுத்திப் பேசிய யூ ட்யூபர்கள் யூ டூ ப்ரூட்டஸ் போன்றவர்கள் மீது இதுவரை நடவடிக்கை இல்லை. பாரதப் பிரதமரை ஒருமையில் பேசி, ஆபாச வார்த்தைகளால் தங்களது தரத்தை காண்பிக்கும் தி.மு.கவினர் மீது நடவடிக்கை இல்லை. ஆனால் ஆட்சியில் இருக்கும் ஆணவத்தில் ஹிந்துக்களுக்கு ஆதரவாக கருத்து சொன்னால் சிறையில் அடைப்பது என்பதை ஹிந்து விரோத தி.மு.க அரசு தொடர்கதையாக கொண்டிருக்கிறது. தொடர்ந்து ஹிந்து விரோத அராஜகங்களால் அடுத்த தேர்தலில் காணாமல் போவது உறுதி என ஊடக ஆய்வுகள் தெரிவிக்கின்றன என்பதை மனதில் கொண்டு அனைத்து மக்களுக்கும் பொதுவான ஆட்சியை தர வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார்.