எதிர்க்கட்சிகளின் கபட நாடகம்

‘பிரதமர் நரேந்திர மோடி அரசின் தொலைநோக்கு திட்டங்கள் காரணமாக, கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட கடுமையான சமூக, பொருளாதார சவால்களை பாரதம் நல்வாய்ப்புகளாக மாற்றியுள்ளது. தொற்று குறைந்ததில் இருந்து கச்சா எண்ணெய் விலை, 500 சதவீதம் அதிகரித்தது, உக்ரைன் ரஷ்ய போரால் கச்சா எண்னெய் விலையில் கடுமையான ஏற்ற இறக்கங்கள் உள்ளன என்றபோதும், மாநில அரசுகளுக்கு வழங்கும் நிதி ஆதரவுகளில் மத்திய அரசு பொறுப்பாகவும் கூட்டாட்சி நெறிமுறைகளையும் பின்பற்றியும் நடந்துகொள்கிறது. பாரதம் 85 சதவீத பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்து வருகிறது. இதனால் நாட்டிற்கு கூடுதல் சுமை ஏற்படுகிறது. எனினும் பெட்ரோல் விலை உயர்வு குறைந்தபட்சமாக இருப்பதை மோடி தலைமையிலான மத்திய அரசு உறுதி செய்துள்ளது. 2021 ஏப்ரல் முதல் 2022 ஏப்ரல் வரை, பெட்ரோல் விலை உயர்வு, அமெரிக்காவில் 50.60 சதவீதம்; கனடாவில் 50.70 சதவீதம்; ஜெர்மனியில் 50 சதவீதம்; இங்கிலாந்தில் 58.90 சதவீதம்; பிரான்சில் 33 சதவீதம் என அதிகரித்து இருந்தது. ஆனால், இதே காலகட்டத்தில் பாரதத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு சுமார் 16 சதவீதமாக மட்டுமே உள்ளது. கொரோனா தொற்றால் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டபோதும் மத்திய அரசு, 2021 நவம்பரில், பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 5 ரூபாயும்; டீசலுக்கு 10 ரூபாயும் குறைத்தது. பல மாநில அரசுகள் மதிப்பு கூட்டு வரியை குறைத்த போதிலும், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் தமிழகம், மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் அதிகப்படியான கலால் வரிகளை தொடர்ந்து விதித்துள்ளன. விலைவாசி உயர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தும் அதே எதிர்க்கட்சிகள் எரிபொருளின் மீது அதிக வரியை விதிப்பது மிகவும்ஆச்சரியமாக உள்ளது. இந்த அரசுகள், நுகர்வோருக்கு தங்களால் இயன்ற நிவாரணம் வழங்குவதற்கு தயக்கம் காட்டுகின்றன. ஆனால் பொய்யான கதைகளை பரப்புகின்றன. இது அவற்றின் அப்பட்டமான கபட நாடகத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது’ என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.