தமிழகத்தில் கள்ளச் சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த விவகாரத்தில் இதுவரை என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்? கள்ளச் சாராயம் எப்படி விற்கப்படுகிறது? அதற்கான மூலப் பொருட்கள் எங்கிருந்து அவர்களுக்கு கிடைக்கின்றன? கள்ளச் சாராயம் விற்கப்படவில்லை எனில், எப்படி ஒரே நாளில் இத்தனை பேர் கைது செய்யப்பட்டது ஏன்? உள்ளிட்டவை குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளரிடம் ஆளுநர் ஆர்.என். ரவி அறிக்கை கேட்டுள்ளார். முன்னதாக, விழுப்புரம் மாவட்டம் எக்கியார்குப்பம், செங்கல்பட்டு மாவட்டம் பெருங்கரணை கிராமங்களைச் சேர்ந்த 22 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து தமிழக காவல் துறை இதில் சம்பந்தப்பட்ட நூற்றுக் கணக்கானோரை கைது செய்தது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன் இதுவரை கள்ளச்சாராயம் விற்பவர்கள் குறித்து அறிந்திருந்தும் அவர்களை கைது செய்யாமல் மாமூலாகவே கவனித்து வந்ததா காவல்துறை? அவர்கள் ஆட்சியில் உள்ளவர்களுக்கு வேண்டப்பட்டவர்கள் என்பதால் நடவடிக்கை எடுக்கப்படவில்லையா? என பல சந்தேகங்களையும் எழுப்பியது. தமிழக முதல்வர் ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சமும், சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படுவதாக அறிவித்ததும் மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. கள்ளச் சாராய வழக்கில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நபருடன் தமிழக சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படமும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவை அனைத்திற்கும் மேலாக இந்த விவகாரத்தில் காவல்துறையின் நடவடிக்கைகள், அரசின் செயல்பாடுகள், கைது செய்யப்பட்ட நபருடன் அமைச்சரின் புகைப்படம் உள்ளிட்டவை குறித்து அவர்கள் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கங்கள் மக்களுக்கு எரிச்சலூட்டியது என்றால் அது மிகையல்ல.