பிராணிகளை வளர்த்து கொன்று இறைச்சிக்கு பயன்படுத்துவதற்கு பதிலாக அவற்றின் செல்களை ஆய்வகத்தில் வளர்த்து அந்த இறைச்சியை பயன்படுத்தமுடியும் என்பது பல ஆண்டுகளுக்கு முன்பே நிரூபிக்கப்பட்டுள்ளது. ‘கல்ச்சர்டு மீட்’ எனப்படும் இம்முறைக்கு, பண்ணை வளர்ப்பு முறையில் தேவைப்படுவதைவிட 96 சதவீதம் குறைவான நீரும், 99 சதவீதம் குறைவான நிலமும் போதும். இது ‘செல் வேளாண்மை’ என்றும் அழைக்கப்படுகிறது. இறைச்சித் துறையின் எதிர்காலம் இதுதான் என கருதப்படுகிறது. இந்நிலையில், இஸ்ரேலை சேர்ந்த பியூச்சர் மீட் டெக்னாலஜீஸ் என்ற நிறுவனம், தற்போது உலகின் முதல் ஆய்வுக்கூட இறைச்சியை, பெருமளவில் தயாரிக்கும் தொழிற்சாலையை துவக்கியுள்ளது. அங்கு நிறுவப்பட்டுள்ள பெரிய கொள்கலன்களில், பன்றி, மாடு போன்றவற்றின் செல்கள் வளர்க்கப்படுகின்றன. அந்த செல்கள் கலனிலேயே பல்கிப் பெருகி நேரடியாக இறைச்சியாகவே வளர்கின்றன. பண்ணை முறையில் வளர்ப்பதைவிட 10 மடங்கு கூடுதல் இறைச்சி இதில் கிடைப்பதாக பியூச்சர் மீட் டெக்னாலஜீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இனி உலகெங்கும், விரைவில், மீன், இறால், கோழி ஆடு என எல்லா வகை அசைவ உணவுகளும் செல் வேளாண்மை முறையில் கிடைக்கும். ஹலால் தொல்லை இருக்காது. விலங்கினங்களை வளர்த்து வெட்டும் அவலம் தொடராது என நம்பலாம்.