அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள பிரம்மபுத்திரா ஆற்றுப்படுகையில், தனி மனிதனாக ஒரு காட்டையே உருவாக்கியவர், ‘இந்தியாவின் வன நாயகன்’ என்றும் அழைக்கப்படும் பத்ம ஸ்ரீ விருது பெற்ற ஜாதவ் பயெங். இவர், தனது வாழ்நாளின் எவ்வித தன்னலமும் இன்றி 30 ஆண்டுகளை செலவிட்டு சுமார் 550 ஹெக்டேரில் 40 மில்லியன் மரங்களை நட்டு ‘மொலை கதோனி’ என்றழைக்கப்படும் அடர்த்தியான காட்டை உருவாக்கியுள்ளார். இந்த மொலை கதோனி, தற்போது புலிகள், யானைகள், மான், முயல்கள் உள்ளிட்ட பல பூர்வீக மற்றும் புலம்பெயர்ந்த உயிரினங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான மரங்களின் இருப்பிடமாக உள்ளது. இவருக்கு வட அமெரிக்க நாடான மெக்சிகோ அரசு அழைப்பு விடுத்துள்ளது. அந்நாட்டை பசுமைக்குடிலாக மாற்றும் திட்டத்தில் கைக்கோர்த்துள்ள பேயங், சுமார் 8 லட்சம் ஹெக்டர் பரப்பளவில் சுமார் 7 மில்லியன் மரங்களை கொண்ட அடர்த்தியான காட்டை உருவாக்க மரங்களை நடவு செய்யவிருக்கிறார் இந்த வனமகன். இத்திட்டத்தை செயல்படுத்துவதில் அந்நாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் பேயங்குடன் இணையவுள்ளனர். வரும் செப்டம்பர் மாதம், இந்தியாவிலிருந்து பேயங் மெக்சிகோ புறப்படவுள்ளார்.