அமெரிக்கா சென்றிருந்த தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, 12 நாள் பயணத்தை முடித்து கொண்டு நேற்று சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு நிர்வாகிகளும் கட்சியினரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிறகு விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “ஹிந்தி மொழியை மத்திய அரசு திணிக்கவில்லை. 3 மொழிகளை கற்க வேண்டும் என்பது மத்திய அரசின் கல்வி கொள்கை. காங்கிரஸ் ஆட்சியில் தான் ஹிந்தி கட்டாயம் என இருந்தது. ஆனால், அதே காங்கிரஸ் கட்சியுடன் தான், தி.மு.க கூட்டணியில் உள்ளது. தி.மு.க அரசின் கபட நாடகம் தான் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம். ஹிந்தி திணிப்பை மத்திய அரசு செய்தால், தமிழக பாஜ.க அதை எதிர்க்கும்.
தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால், 6ம் வகுப்பு வரை பயிற்றுமொழி தமிழாகத்தான் இருக்கும். இது புதிய கல்விக் கொள்கையில் மிக தெளிவாக கூறப்பட்டுள்ளது. அட்டவணை 8ல் இருக்கும் மொழிகள்தான் இந்தியாவின் அதிகாரபூர்வமான மொழிகள். இந்தியாவில் நடத்தக்கூடிய எந்த தேர்வுகளும் இந்த 8வது அட்டவணையில் உள்ள மொழிகளில்தான் நடத்த வேண்டும். இதில் எந்த மாற்றமும் இல்லை. இல்லாத ஒரு புரளியைக் கிளப்பி, தி.மு.கவின் மீது மக்களுக்கு இருக்கும் கோபத்தை மறைப்பதற்கு தி.மு.க கபட நாடகம் ஆடுகிறது. எப்போதெல்லாம் மக்களுக்கு ஆட்சியின் மீது கோபம் வருகிறதோ, தி.மு.க தவறுகளால் மக்கள் மன்றத்தில் அதற்கு ஒரு அவப்பெயர் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் ஹிந்தி என்ற விஷயத்தை கையில் எடுப்பார்கள். இது புதிததல்ல. 70 ஆணடுகளாக தமிழக மக்கள் இதை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
முதல்வருக்கு இரண்டு விதமான பயம் வந்திருக்கிறது. ஒன்று அவருடைய கட்சியில் யார், என்ன செய்வார்கள்? எப்போது, எப்படி செய்வார்கள்? என்பது புரியாமல் பயத்தில் உள்ளார். இரண்டாவது, பா.ஜ.கவின் வளர்ச்சி மீதான பயம். இந்த இரண்டும் சேர்ந்து முதல்வருக்கு தூக்கத்தைக் கெடுக்கிறது. பா.ஜ.க என்ற கட்சியே தமிழகத்தில் இல்லவே இல்லை என்று 5 ஆண்டுகளுக்கு முன்னால் கூறிய ஸ்டாலின், இன்று பா.ஜ.க தங்களது முதல் எதிரி என அறைகூவல் விடுத்துள்ளார். எப்போதும் இல்லாத அளவுக்கு பா.ஜ.கவை தாக்கி பேசியிருக்கிறார். ஏதாவது ஒன்றை செய்து 2024ல் ஆட்சிக்கு வந்துவிடுவார்கள் என்று பேசியிருக்கிறார். அதை பார்க்கும்போதே பா.ஜ.க தமிழகத்தில் தமிழக மக்கள் மனதில் வளர்ந்து கொண்டிருப்பது தெரியும்.
யார் ஹிந்து, யார் ஹிந்து இல்லை என்று கண்டுபிடிப்பது தான் தற்போது பேஷனாக உள்ளது. முதல்வர் ஸ்டாலினை தூங்க விடுங்க என தி.மு.க’வினருக்கு வேண்டுகோள் வைக்கிறேன். அக்டோபர் 30ல் பிரதமர் மோடி தமிழகம் வருவதாக அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் தற்போது வரை இல்லை” என்றார்.