கோவை மாவட்டம் அன்னூரில் தமிழக அரசு சார்பில் விளைநிலங்களில் தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அண்ணாமலை, “விவசாயம் செய்யும் பெண், பணியை விடுத்து பசியுடனும் வயிற்றெரிச்சலுடனும் தரையில் அமர்ந்து யோசிக்க தொடங்கினால், கோட்டை உட்பட என்ன மாற்றங்கள் நடக்க வேண்டுமோ அவை அனைத்தும் நடக்கும். நாங்கள் ஏற்கெனவே ஒரு முறை விவசாயிகளை சந்தித்தோம். இதை அறிந்து தமிழக அரசு தொழிற்பேட்டை அமைக்கும் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்திவைத்தது. பிறகு மீண்டும் அன்னூர், மேட்டுப்பாளையம் பகுதிகளில் 3,862 ஏக்கர் நிலம் சிப்காட் தொழிற்பேட்டை திட்டத்துக்கு கையகப்படுத்த அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்காக, அன்னூரில் தரிசு நிலமென சொல்லி விவசாய நிலத்தை கையகப்படுத்துகிறார்கள். விவசாயத்தை வாழ்வாதாரமாக பார்க்க வேண்டும். அன்னூர் விவசாயிகள் பணக்காரர்களாக வேண்டும் என விரும்பவில்லை என்பதை முதலமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும்.ஆனால், தி.மு.க அரசுக்கு இது குறித்து தெரிய வாய்ப்பில்லை.
விவசாயிகளை புரிந்து நடந்தவர் காமராஜர். தண்ணீர் வசதி இருந்தால் தரிசு நிலத்தை கூட விளைநிலங்களாக மாற்றிவிடலாம் என்பதை கருத்தில் கொண்டு தமிழகத்தில் பல அணைகளியும் கால்வாய்களையும் கட்டினார். அவிநாசி அத்திக்கடவு திட்டத்துக்காக பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தப்பட்டு, காத்திருந்து தற்போதுதான் தண்ணீர் வர தொடங்கியுள்ளது. தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ள நிலத்தில் வெங்காயம், வாழை, மஞ்சள் உள்ளிட்ட விளைபொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
தமிழகத்தில் தொழிற்சாலைகளுக்காக 48,195 ஏக்கர் ஒதுக்கீடு செய்துள்ளதாக அரசின் குறிப்பில் உள்ளது. ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலம் பயன்படுத்தப்படாமல் உள்ளது. தி.மு.க ஆட்சிக்காலத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு நாங்குநேரியில் 2,518 ஏக்கர் தொழிற்பேட்டை அமைக்கப்பட்டது. ஆனால், ஒரு நிறுவனம் கூட இன்றுவரை அங்கு தொடங்கப்படவில்லை. தூத்துக்குடி துறைமுகத்துக்கு அருகில் அமைந்துள்ள அந்த இடத்துக்கே இந்த நிலை என்றால் அன்னூர் பகுதியின் நிலை எப்படி இருக்கும்? அன்னூரில் தொழிற்பேட்டை அமைக்க வேண்டிய அவசியம் என்ன? நிலங்களை அபகரித்து விவசாயிகள் வாழ்வாதாரத்தை அழித்து ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு நிலத்தை எடுத்து தருகிறார்கள். கேரள அரசு தேனி மாவட்டத்திற்குள் சர்வே நடத்தி கொண்டிருக்கின்றனர். தமிழக அரசின் அனுமதியோடு 80 ஏக்கர் விவசாய நிலங்களை கேரள அரசு எடுத்துவிட்டது.தொழிற்பேட்டை அமைக்க தரிசு நிலங்கள் வேண்டும் என்றால் தமிழக அரசு தூத்துக்குடி, திருநெல்வேலி, கரூர், பெரம்பலூர் பகுதிகளில் திட்டங்களை செயல்படுத்தலாம். எதிர்ப்பை மீறி அன்னூரில் தொழிற்பேட்டை அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன். இங்கிருந்து ஒரு பிடி மண்ணைக் கூட எடுக்க விட மாட்டோம்.
டெல்லியில் இருக்கும் பிரதமர் மோடி ஒவ்வொரு நாளும் தமிழகத்திப் பற்றி யோசிக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்புகூட காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி குறித்து என்னிடம் கேட்டறிந்தார். காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சிக்காக தமிழகத்தில் இருந்து வந்தவர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து அவர் பரிவோடு என்னிடம் கேட்டறிந்தார். காசி தமிழ் சங்கத்திற்கு சென்று வந்தவர்கள் இதுவரை திமுக சொல்லிய பொய்களை உணர்ந்துள்ளார்கள். மத்திய அரசுக்கு போட்டியாக மாநில அரசு காசிக்கு 200 பேரை அனுப்புகிறார்கள். அவர்களை குளிர் காலத்தில் காசிக்கு அனுப்பாமல் வெயில் காலத்தில் அனுப்புங்கள். பா.ஜ.க வேகமாக வளர்ந்து கொண்டிருப்பதைப் பார்த்து அவர்களுக்கு பயம் வந்துவிட்டது. எத்தகைய தாக்குதலை தி.மு.க தொடுத்தாலும் 2024 தேர்தலில் 25 எம்.பி.க்களை பெறப்போவது உறுதி. 70 ஆண்டுகளாக எழுதிய வரலாறை மக்கள் ஆதரவோடு சுக்குநூறாக்கிக் கொண்டிருக்கிறோம்” என கூறினார்.