குற்றவாளி ஒப்புக்கொள்ளமாட்டான்

காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல்காந்தி உள்ளிட்டோர் பங்குதாரர்களாக உள்ள நேஷனல் ஹெரால்டு நிறுவன பங்குகளை இந்தியா அசோசியேட் நிறுவனத்திற்கு மாற்றியதில் முறைகேடு நடைபெற்றதாக கூறி பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி வழக்கு தொடர்ந்துள்ளார். இவ்வழக்கில் சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டத்தின்கீழ் மத்திய அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக வரும் 8ம் தேதி ஆஜராகும்படி காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, ‘1942ல் நேஷனல் ஹெரால்டு நாளிதழ் தொடங்கப்பட்டபோது ஆங்கிலேயர்கள் அதை அடக்க முயன்றனர். தற்போது மோடி அரசும் அதையே செய்கிறது. இதற்காக மத்திய அமலாக்கத் துறையை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது’ என குற்றம்சாட்டினார். காங்கிரசின் இந்த குற்றச்சாட்டிற்கு பதில் அளித்துள்ள பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, ‘நான் குற்றவாளி என்று எந்த ஒரு குற்றவாளியும் ஒப்புக்கொண்டதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள், தண்டனை அனுபவிக்கிறார்கள். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டால், அதை ரத்து செய்ய கோர்ட்டை அணுக வேண்டும். ஆனால் ஜாமீன் கோரி அனுகுகின்றனர். இதன் மூலம் அவர்கள் குற்றவாளிகள் என்றுதானே அர்த்தம்?’ என்று தெரிவித்தார்.