மத்திய அரசின் 8 ஆண்டு கால ஆட்சி நிறைவையொட்டி டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, ‘ஸ்ரீராம ஜென்மபூமி விவகாரம் தொடர்பாக பா.ஜ.க தேசிய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காசி, மதுரா விவகாரங்களை பொறுத்தவரை பா.ஜ.க சார்பில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படாது. இந்த விவகாரங்களில் நீதிமன்றங்களே முடிவெடுக்கும். நீதிமன்ற உத்தரவுகளையும் அரசியலமைப்பு சாசனத்தையும் பா.ஜ.க உறுதியுடன் பின்பற்றும். எங்களை பொறுத்தவரை கலாச்சார வளர்ச்சியை ஊக்குவிக்கிறோம். வலுவான பாரதத்தை உருவாக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. நாட்டின் வளர்ச்சியில் அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து அழைத்து செல்வோம். யாரையும் புறக்கணிக்க மாட்டோம். உத்தராகண்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதை வரவேற்கிறோம். அனைத்து தரப்பினரும் சமமாக நடத்தப்பட வேண்டும். இதுதான் எங்களது அடிப்படைக் கொள்கை. அதன் அடிப்படையில் பா.ஜ.க செயல்படுகிறது. சேவை, நல்லாட்சி, ஏழைகளின் நலன் ஆகியவற்றை முன்னிறுத்தி பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி நடத்தி வருகிறார். அவரதுஆட்சியில் புதிய பாரதம் உருவாகி வருகிறது’ என தெரிவித்தார்.