சட்டமேதை அம்பேத்கார் மற்றும் சமூக சீர்திருத்தவாதியான ஜோதிபா பூலே ஆகியோரின் இலக்கியங்களை வெளியிடப்பபோவதாக மஹாராஷ்டிரா அரசு முன்பு அறிவித்திருந்தது. ஆனால் அந்த திட்டத்தை நிறுத்திவிட்டதாக சில ஊடகங்கள் செய்திகள் வெளியாகின. அதைத்தொடர்ந்து 2021ல் உயர்நீதிமன்ற நீதிபதிகள் பிபி.வரலே மற்றும் டி.எஸ் குல்கர்னி கொண்ட டிவிஷன் பெஞ்ச் இந்த விவகாரத்தில் தாமாக முன்வந்து வழக்கு பதிந்தது. இவ்வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவும் நோக்கத்தில் நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞரான ஸ்வராஜ் ஜாதவ், “டாக்டர் அம்பேத்கார் மற்றும் ஜோதிபா புலேவின் அசல் கையெழுத்துப்பிரதிகள் தெற்கு மும்பையில் உள்ள ஒரு பழைய கட்டிடத்தில் அதிக வெளிச்சம் காற்றோட்டம் இல்லாத இடத்தில் வைத்து அரசு பராமரிக்கிறது. பருவமழை வந்தால் அந்த காகிதங்கள் நனைவதற்கும் கெட்டுபோவதற்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதனால் அந்த அரிய பொக்கிஷங்கள் அழிந்துபோக வாய்ப்புள்ளது. இதனால் மீட்கமுடியாத சேதம் ஏற்படும்” என தெரிவித்தார். மாநில அரசு தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், “இதுதொடர்பாக அரசு தரப்பு விரைவில் பிரமாணபத்திரத்தை தாக்கல் செய்யும்” என கூறினார். இந்த மேம்போக்கான பதிலால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், அந்த பிரதிகளை பாதுகாக்க மா ல அரசு என்னென்ன நடவடிக்கை எடுத்துவருகிறது என்பதை அந்த பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு அடுத்த நான்கு வாரங்களுக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.