பிரதமர் மோடியின் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியின் 100வது பகுதி நேற்று ஒலிபரப்பானது. மனதின் குரல் நிகழ்ச்சியில் நாடு முழுவதும் வெளிச்சத்துக்கு வராத சாதனையாளர்கள், செயற்கரிய செயல்கள் செய்தவர்கள் என்று பலதரப்பினரையும் அடையாளம் கண்டு நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தி கௌரவித்து வருகிறார் பிரதமர். உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர்கெரி மாவட்டத்தை சேர்ந்த பூனம் என்ற பெண்ணும் அவ்வாறு பாராட்டப்பட்டவர்களில் ஒருவர். இவர் கழிவு வாழைத்தண்டுகளில் இருந்து பல்வேறு விதமான பொருட்களை தயாரித்து வருகிறார். இதன் மூலம் சுயஉதவிக்குழு ஒன்றையும் உருவாக்கி பல பெண்களுக்கு வேலை வாய்ப்பும் வழங்கியுள்ளார். நம்மை போன்ற ஒரு சாமானியரான இந்த பெண்ணின் அரிய முயற்சியையும், உழைப்பையும் பாராட்டிய மோடி அவருடன் உரையாடினார். கடந்த 26ம் தேதி டெல்லியில் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் பிரதமரால் பாராட்டப்பட்டவர்கள் அனைவரும் வரவழைக்கப்பட்டனர். இதில் பூனமும் அவரது கணவர் பிரமோத்குமார் ரஜ்புத்துடன் கலந்து கொண்டார். அங்கு பேசிய பூனம், பேசிய பூனம், பிரதமர் மோடி எனது பெயரை குறிப்பிட்டு பேசியது கடினமாக உழைக்கவும், வாழ்க்கையில் அதிக உயரங்களை எட்டவும் உத்வேகத்தை அளிப்பதாக கூறினார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பூனத்துக்கு நிகழ்ச்சியில் இருந்தபோதே பிரசவ வலி ஏற்பட்டது. உடனே அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் பெருமை பெற்ற இத்தம்பதிகள் தங்களது குழந்தைக்கு ‘மன் கி பாத்’ என்று பெயர் சூட்டினர். பூனம் தம்பதியை மத்திய அமைச்சர் அனு ராக் சிங் தாக்கூர் மற்றும் அதிகாரிகள் வாழ்த்தினர்.