குஜராத் மாநிலம் காந்திநகரில் பாதுகாப்புத்துறை சார்ந்த கண்காட்சியை துவக்கி வைத்த பிரதமர் மோடி, அங்கு விமான படை தளத்திற்கும் அடிக்கல் நாட்டினார். பின்னர் உரையாற்றிய அவர், “குஜராத்தில் நடக்கும் பாதுகாப்பு தளவாட கண்காட்சி பாரத நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்கும் கண்காட்சியாகவும், பாரதத்தில் தயாரான தளவாடங்கள் மட்டும் இடம்பெற்றுள்ள கண்காட்சியாகவும் உள்ளது. இதற்கு முன்பும் பாதுகாப்பு கண்காட்சி நடந்துள்ளது. ஆனால், தற்போதைய கண்காட்சியானது கணிக்க முடியாத வகையில் அமைந்துள்ளது. இதுவரை நாட்டில் நடந்த பாதுகாப்பு கண்காட்சிகளில் மிகப்பெரிய பாதுகாப்பு கண்காட்சியான இது, புதிய எதிர்காலத்திற்கான உறுதியான துவக்கத்தை குறிக்கிறது. இது புதிய பாரதத்தின் துவக்கம். தற்போதைய ‘அம்ரித் கால்’ காலகட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, புதிய பாரதத்தை பெரிய அளவில் இந்த பாதுகாப்பு கண்காட்சி எடுத்து காட்டுகிறது. இதில், நாட்டின் வளர்ச்சி, மாநிலங்களின் பங்களிப்பு, இளைஞர்களின் சக்தி, அவர்களின் கனவு,, தைரியம் மற்றும் திறமை அடங்கியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து 101 பாதுகாப்பு தளவாடங்கள் இறக்குமதிக்கு தடை விதித்து அந்த பட்டியலை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிடும். அதனுடன் 411 பாதுகாப்பு சார்ந்த பொருட்கள் பாரதத்திலேயே கொள்முதல் செய்யப்படும். இது சில நாடுகளுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை நாம் அறிவோம். ஆனால், பல நாடுகள் நேர்மறையான எண்ணத்துடன் எங்களுடன் வந்துள்ளன. எதிர்காலத்திற்காக இந்த வாய்ப்புகளுக்கு பாரதம் வடிவம் கொடுக்கும்போது, அதன் நண்பர்களான 53 ஆப்ரிக்க நாடுகள் எங்களுடன் தோளோடுதோள் சேர்த்து நிற்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். சர்வதேச பாதுகாப்பிற்கும், தடையற்ற வர்த்தகத்திற்கும், கடல் பாதுகாப்பானது அனைத்து உலக நாடுகளுக்கும் முக்கியமானது. பாரத பாகிஸ்தான் எல்லையில் தற்போது அமையவுள்ள இந்த தீசா விமான படை நிலையம், நாட்டின் பாதுகாப்பிற்கு முக்கியமான மையமாக இருக்கும். நாடு வெகுதூரம் சென்றுவிட்டது. முன்பு புறாக்களை விடுவித்த நாம், தற்போது சிறுத்தைகளை விடுவிக்கிறோம்” என்று பேசினார்.