பயங்கரவாதி தப்பிக்க உதவிய முதல்வர்

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ், ‘கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் மற்றும் முதல்வரின் முதன்மைச் செயலாளர் சிவசங்கர் ஆகியோர், ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த பயங்கரவாதி என சந்தேகிக்கப்படும் ஒருவர் நமது நாட்டிலிருந்து தப்பிக்க ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரக ஜெனரல் மற்றும் துணைத் தூதரகத்திற்கு உதவி செய்தனர்’ என கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடந்த ஜூலை 4, 2017 அன்று, எகிப்தில் பிறந்த ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த ஒருவர் துரையா செயற்கைக்கோள் தொலைபேசியுடன் கொச்சி விமான நிலையத்தில் சி.ஐ.எஸ்.எப் வீரர்களால் கைது செய்யப்பட்டு நெடுவாசல் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் முதல்வர் அலுவலகம் தலையிட்டது. சம்பவம் நடந்த மூன்று நாட்களுக்குப் பிறகு அவர் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டார். அந்த நபர் கைது செய்யப்பட்ட நாளில், கேரளாவில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துணைத் தூதரகத்திலிருந்து முதல்வர் அலுவலகத்துடன் பேச எனக்கு அழைப்பு வந்தது. இதுபற்றி எம். சிவசங்கரை அழைத்து தெரிவித்தேன். 10 நிமிடங்களில் அவர் என்னை அழைத்தார். அந்த நபரை உடனடியாக விடுவிக்க உதவுவதற்கு ஒரு அதிகாரியை நியமித்ததாகக் கூறினார். கைது செய்யப்பட்ட அந்த நபரது நடவடிகைகள் மிகவும் சந்தேகத்திற்குரியவை. நான்கு நாட்களாக மாநிலத்தில் சுற்றித் திரிந்த அவரது செயல்பாடுகளை விசாரிக்காமல் திருப்பி அனுப்பப்பட்டார். அவரது விடுதலையில் முதல்வர் அலுவலகம் எப்படி தலையிட முடியும்? முதல்வர் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி சந்தேகத்திற்குரிய வெளிநாட்டுப் பிரஜைக்கு சந்தேகத்திற்குரிய வகையில் உதவினார். அவரது மகள் வீணா விஜயன் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொழில் தொடங்குவதை உறுதி செய்வதற்காக இந்த சட்டவிரோத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன” என தெரிவித்தார்.