பிசினஸ் டுடே@100 உச்சி மாநாட்டில் பேசிய பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல், “பாரதத்தை ஆளும் மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தற்போது மிக உற்சாகமான கட்டத்தில் உள்ளது. இதுகுறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். பாரதத்தில் எல்லாம் நல்ல முறையில் சீரமைக்கப்பட்டுள்ளதாக நான் உணர்கிறேன். சீனாவை போல கட்டமைப்பினை உருவாக்குவதற்கு நமக்கு 20 அல்லது 30 ஆண்டுகள் ஆகும். நாம் சாலை மேம்பாட்டினை துரிதமாக செயல்படுத்தி வருகிறோம். புதிய விமான நிலையங்களை அமைத்து வருகிறோம். பல புதிய புதிய விஷயங்கள் தேசத்தில் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. பாரதம் பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாடு. எனவே, இதுபோன்ற திட்டங்களை அமல்படுத்துவது அவ்வளவு எளிதல்ல. இங்கு செய்ய வேண்டிய் பணிகள் ஏராளமாக உள்ளன. டிஜிட்டல் கட்டமைப்பு இங்கேயும் உள்ளது. பாரதம் 3.1 டிரில்லியன் பொருளாதாரமாக உள்ளது. 2027ல் 5 டிரில்லியன் பொருளாதாரமாக மாற முயற்சித்து வருகிறது. இதில், 1 டிரில்லியன் டாலர் டிஜிட்டல் பொருளாதாரமாக திட்டமிடப்பட்டுள்ளது. பாரதத்தின் உற்பத்தி துறையை நீண்டகாலமாக கவனித்து வருகிறேன். 1990களில் எரிக்சன், நோக்கியா போன்ற பல பெரிய நிறுவனங்கள் நமது நாட்டில்தான் உற்பத்தியை தொடங்கின. ஆனால் அவற்றில் பலவும் 5 ஆண்டுகள் கழித்து நாட்டை விட்டு வெளியேறிவிட்டன. பாரதத்தின் இத்தகைய இழப்புகள் சீனாவுக்கு லாபமாக மாறிவிட்டது. நாம் அந்த சமயத்தில் உற்பத்தியில் இருந்து மெதுவாக விலகிச்செல்ல ஆரம்பித்தோம். எனினும் தற்போதைய அரசு பல்வேறு சீர்த்திருத்தங்களை செய்து வருகிறது. முதலீடுகளை ஊக்குவித்து வருகிறது. இதனால் லட்சக்கணக்கான கோடி முதலீடுகள் நமது நாட்டில் குவிந்து வருகின்றன. இது எதிர்காலத்தில் பாரதத்தின் வளர்ச்சியை அதிகரிக்கும். 2014ம் ஆண்டில் நமது நாட்டில் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி எதுவும் இல்லை, ஆனால் இன்று எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி 80 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உள்ளது. இத்துறையில் 2.5 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பணிபுரிகின்றனர். தற்போது பல சர்வதேச நாடுகளிலும் நிலவி வரும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், நிறுவனங்கள் நம்பகமான, பாதுகாப்பான உற்பத்தி இடங்களை தேடத் துவங்கியுள்ளது. குறிப்பாக சீனாவில் நிலவி வரும் பிரச்சனைகள் நமக்கு சாதகமாக மாறத் தொடங்கியுள்ளது. மத்திய அரசு தற்போது உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டம் மூலம் உற்பத்தியை மேம்படுத்த முயற்சித்து வருகிறது. இதில் பல பெரிய நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. இது பாரதத்தின் நீண்டகால வளர்ச்சிக்கு சாதகமாக அமையலாம்” என்று கூறியுள்ளார்.