அசாம் இளைஞர் காங்கிரஸ் தலைவர் அங்கிதா தத்தா, இளைஞர் காங்கிரஸ் தேசியத் தலைவரான பி.வி ஸ்ரீனிவாஸ் தன்னை துன்புறுத்துவதாகவும் தன்னை தொடர்ந்து பயன்படுத்துவதாகவும், பாலினத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், ஸ்ரீனிவாஸ் மீதான தனது குற்றச்சாட்டுகளை கட்சித் தலைமை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் புகார் அளித்து ஆறு மாதங்கள் ஆகியும், ராகுல், பிரியங்கா, சோனியா, மல்லிகார்ஜுன் கார்கே, உள்ளிட்ட எவரும் இதனை விசாரிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் புகார் தெரிவித்தார். இதனையடுத்து அங்கிதா தத்தாவை 6 வருடங்கள் கட்சியில் இருந்து நீக்கியது காங்கிரஸ் தலைமை. இதையடுத்து, ஏப்ரல் 19 அன்று அசாமில் உள்ள திஸ்பூர் காவல் நிலையத்தில் அங்கிதா தத்தா புகார் அளித்தார். இதையடுத்து, அங்கீதா தத்தா தனக்கு எதிராக பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய கௌஹாத்தி நீதிமன்றத்தில் ஸ்ரீனிவாஸ் கோரிக்கை வைத்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், பாலியல் துன்புறுத்தல் வழக்கில் இளைஞர் காங்கிரஸ் தேசியத் தலைவர் பி.வி ஸ்ரீனிவாசுக்கு எவ்வித இடைக்கால நிவாரணமும் வழங்க முடியாது, வழக்கை ரத்து செய்யமுடியாது என கூறிவிட்டது.