காங்கிரஸ் கட்சியின் உத்தரபிரதேசத்தை சேர்ந்த இளம் தலைவர் ஜிதின் பிரசாதா, சமீபத்தில் பா.ஜ.கவில் இணைந்தார். இது அக்கட்சியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, காங்கிரஸ் கட்சியில் உடனடியாக சீர்திருத்தம் தேவை என சோனியாவுக்கு கடிதம் எழுதிய முக்கியத்தலைவர்களில் ஜிதினும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ‘பல இளம் தலைவர்கள் ஏதோ ஓர் எதிர்பார்ப்பில் கட்சியை விட்டு விலகி வருகின்றனர். கட்சியில் உள்ள பிரச்னைகள் குறித்து தலைமை உணர வேண்டிய நேரம் ஏற்கனவே வந்துவிட்டது. இனியாவது காங்கிரஸ் தலைவர்கள் கவனமாக செயல்பட வேண்டும்’ என, காங்கிரஸ் கட்சியில் ஓரம்கட்டப்பட்ட மூத்த தலைவர் கபில் சிபல் கூறியுள்ளார். காங்கிரசில் ஓரம்கட்டப்பட்ட அதிருப்தி தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான வீரப்ப மொய்லி, ‘ஜிதின் பிரசாதா வெளியேறியது, கட்சிக்கு நல்ல படிப்பினை. கட்சியில் மிகப் பெரிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியமும், நேரமும் வந்துவிட்டது. நாளை பார்த்துக் கொள்ளலாம் என, ஒத்தி வைக்க முடியாது. அடுத்த ஆண்டில் ஏழு மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. அதில் சிறப்பாக செயல்படாவிட்டால், 2024ல் லோக்சபா தேர்தலை நம்மால் எதிர்கொள்ளவே முடியாது என்பதை உணர்ந்து, கட்சித் தலைமை செயல்பட வேண்டும்’ என கருத்து தெரிவித்துள்ளார்.