புகார் அளித்த பா.ஜ.க

ஊட்டச்சத்து பெட்டக கொள்முதல் முறைகேடு தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனரிடம், தமிழக பா.ஜ.,வினர் புகார் அளித்ததுள்ளனர். தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, கர்ப்பிணியருக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பெட்டகம் கொள்முதல் டெண்டரில், 100 கோடி ரூபாய் லஞ்சம் கைமாறியுள்ளது என்ற குற்றச்சாட்டை முன் வைத்தார். மேலும் தமிழக அரசு உரிய தீர்வு காணாவிட்டால், லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளிப்போம் என கூறியிருந்தார். இந்நிலையில், சென்னை ஆலந்துாரில் உள்ள தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் அலுவலகத்தில், தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் பால். கனகராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள், ஊட்டச்சத்து பெட்டக கொள்முதல் முறைகேடு குறித்து புகார் அளித்தனர். பின்நர் பேசிய பால் கனகராஜ், ’23 லட்சம் ஊட்டச்சத்து பெட்டக தொகுப்பு வாங்குவதில் ஊழல் நடந்துள்ளது. ஊட்டச்சத்து மாவு ஆவினில் வாங்கப்படாமல், தனியார் நிறுவனத்தில் வாங்கப்படுகிறது. இதில் 50 சதவீத விலை வித்தியாசம் உள்ளது. முறைகேட்டை கண்டுபிடித்து, அதில் சம்பந்தப்பட்டவர்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளோம். ஆதாரம் இருக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என இயக்குனர் தெரிவித்தார். விசாரணையின் போது உரிய ஆதாரங்கள் தரப்படும்’ என கூறினார்.