சிறந்த எடுத்துக்காட்டு

தமிழக அரசு சார்பாக வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு, தி.மு.கவினர் மாநில நிர்வாகத்தை எப்படி நடத்துகின்றனர் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. பெரும்பாலானவர்களுக்கு அனைத்துப் பொருட்களும் கிடைக்கவில்லை, கிடைத்த பொருட்களும் தரமற்று இருக்கின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்தது. சில நாட்களில் பொங்கல் பை காலியாகிவிட்டது, அனைவரும் வீட்டில் இருந்தே பை கொண்டு வரவேண்டும் என கூறப்பட்டது. இதற்கிடையே, கரும்புக்கு ரூ. 33 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தும், விவசாயிகளுக்கு தி.மு.கவின் இடைத்தரகர்கள் ரூ. 13 முதல் 15 வரை மட்டுமே வழங்கினர் என்ற தகவலும் வெளியானது. கமிஷனுக்காக, தமிழக நிறுவனங்களை தவிர்த்து வெளிமாநிலங்களில் இருந்து பொருட்கள் வாங்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. புளியில் பல்லி இருப்பதாக புகார் வந்த நிலையில், தந்தையின் மீது காவல் துறையினர் பிணையில் வெளிவர முடியாத வழக்குப்பதிவு செய்ததால் மகன் தற்கொலை செய்துகொண்ட சோகமும் நடந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர் தாலுகா, சதுப்பேரியில் உள்ள ரேஷன் கடையில் அன்பரசு எனபவருக்கு கொடுக்கப்பட்ட வெல்லத்தில், துணி ஒன்று இருந்துள்ளது. குமரி மாவட்டம் மெதுகும்மல் ஊராட்சிக்கு உட்பட்ட சீனிவிளை பகுதியை சேர்ந்த ஜெயகுமாரி என்பவருக்கு வழங்கப்பட்ட வெல்லத்தில் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பயன்படுத்தும் ஊசி சிரஞ்ச் ஒன்று இருந்துள்ளது. கரும்பு வாங்கியதில் மட்டுமே 30 கோடிக்கும் அதிகமான ஊழல் நடைபெற்றதாக எதிர்கட்சித் தலைவர் பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ள நிலையில், ஒட்டுமொத்தமாக 300 கோடிக்கும் அதிகமாக ஊழல் நடைபெற்றுள்ளதாக பல ஊடகங்களும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன.