முன்னேறும் தலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, அமெரிக்க அரசு, தலிபான் பயங்கரவாதிகளுடன் கடந்த ஆண்டு ஒப்பந்தம் போட்டது. அதன்படி, ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை முழுமையாக திரும்ப பெறும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. ஆனால், அமெரிக்க படைகளின்  வெளியேற்றம் காரணமாக ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் கை ஓங்கி வருகிறது. நாட்டிலுள்ள முக்கிய மாகாணங்களை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றி வருகின்றனர். தற்போது, வடமேற்கு பகுதியில் தஜிகிஸ்தான் நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள படாக்ஸ்கான் மாகாணத்தில் ஒரே இரவில் 3 மாவட்டங்களை தலிபான்கள் கைப்பற்றினர். தலிபான்களுக்கு பயந்து 300க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் தஜிகிஸ்தான் நாட்டுக்கு ஓடிவிட்டனர். படாக்ஸ்கான் மாகாணத்தில் கடந்த 3 நாட்களில் 10 மாவட்டங்களை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். 8 மாவட்டங்களில் மோதல்கள் நடந்து வருகின்றன என அம்மாகாண அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.