பிரதமருக்கு இசையால் நன்றி

மேகாலயாவில் இயற்கை எழில் சூழ்ந்த காங்தாங் கிராமத்தை ஐ.நா உலக சுற்றுலா அமைப்பின் போட்டிக்காக மத்திய அரசு முன்மொழிந்தது. தங்கள் கிராமத்தை சுற்றுலாத் தலமாக மேம்படுத்தும் முயற்சிக்காக காங்தாங் கிராம மக்கள், பிரதமர் மோடிக்கு இசைக் கோர்வையால் நன்றி தெரிவித்து உள்ளனர். அந்த கிராமத்தில் பிறக்கும் குழந்தைக்கு, அக்குழந்தையின் தாய் பெயரோடு சேர்த்து ஒரு தனி இசைக் கோர்வையையும் பெயராக சூட்டுவது பாரம்பரிய வழக்கம். இந்த இசைக் குறிப்பே அந்தக் குழந்தையின் அடையாளமாக வாழ்நாள் முழுவதும் இருக்கும். அந்தக் குறிப்பிட்ட இசைக் கோர்வை வேறு எவருக்கும் பெயராக சூட்டப்படுவதில்லை. இந்த இசை தூரத்தில் இருந்து கேட்கும்போதும் விசில் சத்தம் போல இருப்பதால் இந்த கிராமம் விசில் கிராமம் என்றும் அழைக்கப்படுகிறது. தங்கள் கிராமத்தை சுற்றுலாத் தலமாக மேம்படுத்தும் நடவடிக்கைக்காக, காங்தாங் கிராமப் பெண் ஒருவர் மோடியை பாராட்டி நன்றி தெரிவித்து இசைக் கோர்வையை பாடியுள்ளார். அந்த வீடியோவை மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வாழ்த்துகளை ஏற்குமாறு மோடியை கேட்டுக் கொண்டார். இதனை தனது டுவி்ட்டரில் பகிர்ந்த பிரதமர் மோடி, இந்த அன்பான செயலுக்காக காங்தாங் கிராம மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.