கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள பயங்கரவாத பயிற்சி முகாம்களில் பயங்கரவாதிகளின் எண்ணிக்கையும், செயல்பாடுகளும் 50 சதவீதத்துக்கும் அதிகமாக அதிகரித்துள்ளதாக உளவுத்துறை அமைப்புகள் தெரிவித்துள்ளன. எதிர்வரும் பனிப் பொழிவுக்கு முன்பாக 200க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பாரதத்துக்குள் ஊடுருவ வைக்கும் முயற்சியில் லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகள் ஈடுபட்டுள்ளன. இதற்கேற்ப பயங்கரவாத முகாம்கள் அனைத்தும் எல்லைக்கு அருகே மாற்றப்பட்டுள்ளன. 20க்கும் மேற்பட்ட முகாம்களில் பயங்கரவாதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எல்லையை ஒட்டியுள்ள பொதுமக்களின் வீடுகள் பயங்கரவாத முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன. எல்லையில் ஊடுருவ புதிய வழிகளை காணும் நடவடிக்கைகளிலும் அந்த பயங்கரவாதிகள் ஈடுபட்டுள்ளனர். பயங்கரவாதிகளுக்கு தேவையான உதவிகளை பாகிஸ்தான் ராணுவமும், ஐ.எஸ்.ஐயும் செய்து தருகின்றன. இதனையடுத்து இந்திய ராணுவம், எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பாதுகாப்பு படைகளின் கண்காணிப்பு அதிகரித்துள்ளது. கடும் பனிப் பொழிவுக்கு இடையேயும் எல்லையில் விழிப்புடன் ரோந்து பணியை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.