எல்லையில் பயங்கரவாதிகளின் சதி அம்பலம்: ஆயுதங்கள், போதைப் பொருட்கள் பறிமுதல்!

ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதி அருகே ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருட்களை ராணுவத்தினர் கைப்பற்றி இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த ஓராண்டுகளாகவே பயங்கரவாதிகள் நாச வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். காஷ்மீர் பண்டிட்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதுவரை 10-க்கும் மேற்பட்ட பண்டிட்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அதேபோல, போலீஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால், மாநிலம் முழுவதும் லோக்கல் போலீஸாரும், பாதுகாப்புப் படையினரும் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேசமயம், பயங்கரவாதிகள் ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் துப்பாக்கி, தோட்டாக்கள், வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களையும் மற்றும் போதைப் பொருட்களையும் இந்திய எல்லைக்குள் கடத்தி வருகின்றனர். இதையும், போலீஸாரும், எல்லைப் பாதுகாப்புப் படையினரும் தடுத்து நிறுத்தி வருகின்றனர். இந்த சூழலில், ரஜோரி மாவட்டத்தில் உள்ள ஜாங்கர் பகுதியில் போதைப் பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கடத்தப்பட இருப்பதாக ராணுவத்தினருக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது.

இதையடுத்து, ராணுவத்தினர், பாதுகாப்புப் படையினர் மற்றும் லோக்கல் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதி அருகே ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அவற்றை ராணுவ வீரர்கள் சோதனை செய்தனர். அதில், 2 அதிநவீன கைத்துப்பாக்கிகள், வெடி பொருட்கள் மற்றும் 2 கிலோ போதைப் பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றை ராணுவ வீரர்கள் கைப்பற்றினர். இதுகுறித்து ராணுவத்தினரும், லோக்கல் போலீஸாரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் மூலம் பயங்கரவாதிகளின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டிருப்பதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.