கனடாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசின் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் பல போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதனை சாக்காகக் கொண்டு, கனடாவின் பிராம்ப்டன் பகுதியில் கடந்த மாதம் ஆஞ்சநேயர் கோயிலில் நுழைந்த சில மர்ம நபர்கள் சூறையாடினர். அதனையடுத்து அங்குள்ள அம்மன் கோயில், சிவன் கோயில், ஜெகன்நாதர் கோயில் என அடுத்தடுத்து பல கோயில்களில் இதுபோன்ற அத்துமீறல்கள் நடந்தன. கடந்த ஜனவரி 30 அன்றுகூட, மிசிசவுகா பகுதியில் உள்ள ஹிந்து கலாசார மையத்திற்குள் இரவில் இரண்டு மர்ம நபர்கள் நுழைந்து அங்கிருந்த நன்கொடை உண்டியல்களை உடைத்து பணத்தை கொள்ளையடித்தனர். அங்கிருந்த பொருட்களையும் அடித்து உடைத்தனர். காவல்துறை இதனை விசாரித்து வருகிறது. மேலும், ஹிந்து கோயில்களில் காவல்துறையினர் அதிக அளவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.