அ.தி.மு.க.,வும் – பா.ஜ.,வும் கோவில்கள்; அமைச்சருக்கு தம்பிதுரை பதிலடி

”அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும் வணங்கும் கோவில்கள்,” என, ராஜ்யசபா அ.தி.மு.க., – எம்.பி., தம்பிதுரை, அமைச்சர் உதயநிதிக்கு பதிலடி கொடுத்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சுற்றுவட்டாரத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற எம்.பி., தம்பி துரை, நிருபர்களிடம் கூறியதாவது: அமைச்சர் உதயநிதி, சில தினங்களுக்கு முன், அ.தி.மு.க.,வை குப்பை எனவும், பா.ஜ.,வை பாம்பு எனவும் விமர்சித்திருந்தார். ஹிந்து கோவில்களில் அனந்த சயனத்தில் சுவாமி, பாம்பின் மேல்தான் படுத்திருப்பார்.

அந்த இடத்தில் பாம்புகள் தான் கலாசார கொள்கையாக விளங்குகின்றன. தி.மு.க., ஆட்சி தான், இன்று குப்பை போல உள்ளது. அ.தி.மு.க., என்பது ஒரு கோவில் போன்றது. அதை அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கட்டிக்காத்தனர். அதேபோல, பா.ஜ., என்பது, உதயநிதி கூறியது போல பாம்பு என்றாலும், அதை சீண்டினால் மட்டுமே கொத்தும். அதுவும் வணங்கக்கூடிய ஒரு கோவில் என்பதை, அவர் புரிந்து கொள்ள வேண்டும். ‘ஜி – 20’ மாநாடு வெற்றி பெற்றுள்ளது. பிரதமர் மோடியை உலகத்திலுள்ள அனைத்து தலைவர்களும் பாராட்டுகின்றனர். சீனாவை விட மிகச்சிறந்த வல்லரசு நாடாக இந்தியா உருவெடுத்து உள்ளதாகவும் கூறியுள்ளனர். தி.மு.க.,வில் தான் அரசியல் சனாதனம் நடக்கிறது. அங்கு, ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பொறுப்புக்கு வர முடியும். மற்றவர்களை தீண்டத்தகாதவர்களாக பார்த்து வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.