தமிழக கோயில்களில் இணையதள இணைப்பு ஏற்படுத்துவதாக கூறி பல லட்சக்கணக்கான ரூபாய்கள் ஊழல் நடைபெறுவதாக இந்து முன்னணி குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது. தமிழகத்தில் உள்ள ஹிந்து சமய அறநிலையத்துறை கோயில்களில் இணையதளம் மூலமாக அனைத்து தகவல்களும் பதிவேற்றம் செய்யப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியிருந்தார். அதன்படி பல கோயில்களில் சில நாட்களில் அந்த இணையதள சேவைகள் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால், அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில் உள்ளிட்ட பல கோயில்களில் ஏற்கனவே இணையவழிச் சேவைகள் உள்ளன. கோயில்கள் பற்றிய அனைத்து தரவுகளும் இணையதளத்தில் பதிவேற்றமும் செய்யப்பட்டுள்ளது. இதற்காக அண்ணா சிலக்கான் என்ற தனியார் நிறுவனம் சேவைக் கட்டணமாக ஆண்டுதோறும் ரூ. 18 ஆயிரம் வசூல் செய்கிறது. ஆனால் தற்போது கோயில்களில் இணையதளம் மூலமாக இணைப்பதாகக்கூறி நெல்லையப்பர் கோயிலில் இருந்து சுமார் 5 லட்சம் ரூபாய் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்டு பராமரிப்பு செலவாக ரூ. 18 ஆயிரம் செய்து வந்த நெல்லையப்பர் கோயில் நிர்வாகம், தற்போது ரூ. 5 லட்சம் செலவு செய்ய வேண்டிய அவசியம் என்ன? என்று இந்து முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது. பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட கோயில்களிலும் இதே நிலைமைதான் உள்ளது. இப்படி ஒவ்வொரு கோயிலிலும் பல லட்ச ரூபாய் வசூல் செய்து கோடிக்கணக்கான பணம் ஊழல் செய்யப்படுகிறதோ, தி.மு.க அரசு விஞ்ஞான ரீதியிலான ஊழல் செய்ய பார்க்கிறதோ என்ற சந்தேகத்தை பக்தர்கள் எழுப்பியுள்ளனர்.